குடியரசுத் தலைவரை அவமதித்த பிரதமர்: திருமாவளவன் கண்டனம்!

குடியரசுத் தலைவர் பிரதமர் மோடி அவமதித்துவிட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா இந்த ஆண்டு முதல்முறையாக ஐந்து பேருக்கு அறிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங், பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்புரி தாக்கூர், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானி ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று முன் தினம் நடந்த நிகழ்ச்சியில் நரசிம்ம ராவ், சரண் சிங், கர்புரி தாக்கூர், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோரின் குடும்பத்தினரிடம் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

வயது முதிர்வு மற்றும் உடல்நிலை காரணங்களால் ஓய்வில் இருப்பதால் அத்வானி இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. இதனையடுத்து, அத்வானியின் இல்லத்துக்கே நேரில் சென்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அவருக்கு பாரத ரத்னா விருதை வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு, உள் துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

குடியரசுத் தலைவர் எழுந்து நின்று அத்வானிக்கு விருது வழங்கும் போது, பிரதமர் மோடி அமர்ந்திருந்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காங்கிரஸ், குடியரசுத் தலைவர் நிற்கிறார், பிரதமர் மோடி அமர்ந்திருக்கிறார் என்றும், பழங்குடியின பெண் குடியரசுத் தலைவரை மீண்டும் பிரதமர் மோடி வேண்டுமென்றே அவமதித்துள்ளார் எனவும் குற்றம்சாட்டியது.

இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன், பிரதமர், முன்னாள் துணை பிரதமர் ஆகியோருக்கு தேசத்தின் முதல் குடிமகவான குடியரசுத் தலைவரை எங்ஙனம் மதிக்க வேண்டும் என்பது தெரியாதா என்றும், தேசத்தின் தலைமை, குறிப்பாக அரசின் தலைமை, குடியரசுத் தலைவர் தான் என்பதை வரையறுத்துக் கூறும் அரசமைப்புச் சட்டத்தையேனும் மதிக்க வேண்டும் என்பதுகூட தெரியாதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “இந்த அவமதிப்பு என்பது இவர் பெண்மணி என்பதாலா? அல்லது பழங்குடி என்பதாலா? அல்லது அரசமைப்புச் சட்டம் ஒரு பொருட்டில்லை என்பதாலா? இப்படியொரு படம் வெளியானது அறியாமல் நிகழ்ந்ததா? திட்டமிட்டே நடந்ததா? குடியரசுத் தலைவரை நிற்கவைத்து படம்பிடித்து வெளியிடுவது என்னவகை பண்பாடு? பெரும் அதிர்ச்சியளிக்கிறது” என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

இதேபோல திமுக எம்.பி கனிமொழி, “நம் குடியரசுத் தலைவருக்கு காட்டப்படும் அப்பட்டமான அவமரியாதையால் ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது. பாஜக ஆட்சியின் கீழ், நமது தேசத்தின் அரசியலமைப்புத் தலைவரைக் கூட சாதி மற்றும் பாலினப் பாகுபாடு எவ்வாறு தொடர்கிறது என்பதற்கு இந்தப் படம் ஒரு அப்பட்டமான சான்றாக விளங்குகிறது” என்று விமர்சித்துள்ளார்.