மணல் கடத்தல்: அமலாக்கத்துறை முன்பு ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாட்டு மணல் கடத்தல் தொடர்பான வழக்கில் மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாகவும், இதன் மூலம் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடைபெறுவதாகவும் புகார்கள் முன்வைக்கப்பட்டன. இதனடிப்படையில் தமிழ்நாட்டில் மணல் குவாரிகள், மணல் குவாரி உரிமையாளர்கள் வீடுகள் என பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் களமிறங்கியது பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டது. பொதுப்பணித்துறையின் ஓய்வு பெற்ற பொறியாளர் திலகம், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசின் அலுவலகங்கள் அமைந்த எழிலகத்துக்குள்ளும் அமலாக்கத்துறை நுழைந்தது. எழிலகத்தில் நீர்வளத்துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது சர்ச்சையானது. இந்த சோதனைகளின் அடிப்படையில் திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் உள்ளிட்ட 10 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இந்த சம்மன்களுக்கு எதிராக ஆட்சியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தமிழ்நாடு அரசு சார்பில் ஆட்சியர்களுக்காக வழக்கு தொடரப்பட்டது. அதில் சட்டவிராத பணப்பரிமாற்றத் தடை சட்டத்தில் கனிமவள சட்டம் சேர்க்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியருக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை. மாநில அரசு அதிகாரிகளை துன்புறுத்துகிறது அமலாக்கத்துறை என தெரிவிக்கப்பட்டிருந்தது. அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், கனிம வள சட்டம் மட்டுமல்லாமல், இந்தியத் தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ரூ.4,500 கோடி சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த வழக்கு சம்பந்தமான விவரங்களை விசாரணைக்கு உதவியாகத் தான் கேட்கப்பட்டது என வாதிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களுக்குத் தடை விதித்தது. ஆனால் அமலாக்கத்துறை விசாரணை தொடரலாம் எனவும் தீர்ப்பளித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு எதிராக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி, நீதிபதி பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஏற்கனவே, தமிழக அரசு மற்றும் அதிகாரிகள் தாக்கல் செய்த மனு விசித்திரமானது; அசாதாரணமானது; சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும் தெரிவித்திருந்தனர். அப்போது தமிழ்நாடு அரசுக்கு சரமாரியான கேள்விகளையும் உச்சநீதிமன்றம் கேட்டிருந்தது. அதாவது சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பாக அமலாக்கத்துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பினால் அதை எதிர்த்து தமிழக அரசு ஏன் வழக்கு தொடர்ந்தது? அப்படி தமிழக அரசு வழக்கு தொடர முடியுமா? எந்தச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது? மாவட் டஆட்சியர்கள்தானே தனிப்பட்ட முறையில் மனு தாக்கல் செய்திருக்க வேண்டும்? தமிழ்நாடு அரசு ஏன் தலையிட்டு இடையூறு செய்கிறது? என்றெல்லாம் கேள்விகளை கேட்டது உச்சநீதிமன்றம்.

இவ்வழக்கின் இன்றைய விசாரணையில், தமிழக மணல் கடத்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஏப்ரல் 25-ல் ஆஜராக வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணை மே 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.