பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மன்னிப்பை ஏற்க முடியாது: சுப்ரீம் கோர்ட்!

பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பான வழக்கில் யோகா குரு ராம்தேவ் இன்று நேரில் ஆஜரானார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பல காட்டமான கருத்துகளைத் தெரிவித்தது.

நமது நாட்டில் உள்ள பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் பதஞ்சலி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் பல்வேறு பொருட்களைத் தயாரித்து விற்று வருகிறது. அந்த பொருட்களில் பிரச்சினை இல்லை. ஆனால், அதைப் பதஞ்சலி நிறுவனம் விளம்பரப்படுத்தும் முறை தான் சர்ச்சையைக் கிளப்பியது. இது தொடர்பான வழக்கு சப்ரீம் கோர்ட்டில் கூட தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது,​​பதஞ்சலியின் உத்தரவுக்குக் கீழ்ப்படியத் தவறியதற்காக உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. இந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு பதஞ்சலி நிறுவனம் நிபந்தனையற்ற மன்னிப்பை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது., பதஞ்சலியின் நோக்கம் இந்த நாட்டின் மக்கள் தங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது மட்டுமே என்றும் தவறான தகவல்களைப் பரப்புவது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நடந்த இந்த விசாரணையில் உச்ச நீதிமன்றம் பல முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது. தவறான தகவல்களைக் கொண்டு இருப்பதால் பதஞ்சலி நிறுவனம் தனது மருந்துகளின் அனைத்து விளம்பரங்களையும் உடனடியாக நிறுத்துமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மேலும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாக சுப்ரீம் கோர்ட் மத்திய அரசையும் சாடியது. மத்திய அரசு கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருப்பதாகத் தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், “இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அரசு சில உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியது. மேலும், பாபா ராம்தேவ் மற்றும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பால்கிருஷ்ணா ஆகியோரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டது.

அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. பாபா ராம்தேவ் விசாரணைக்கு நேரில் ஆஜரானார். பதஞ்சலி வழக்கில் ராம்தேவ் மன்னிப்பை ஏற்க முடியாது என்றும் நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளையும் மீறிவிட்டு வழக்கறிஞர் மூலம் மன்னிப்பு கேட்பதை எப்படி ஏற்க முடியும் என்றும் சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது. அதற்குப் பதஞ்சலி வழக்கறிஞர்கள், நிறுவனத்தின் மீடியா பிரிவு தான் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியுள்ளார்கள் என்றும் அதற்கு மன்னிப்பு கோரியுள்ளோம் என்றும் தெரிவித்தனர். இந்த பதிலால் கோபடைந்த சுப்ரீம் கோர்ட், மீடியா பிரிவு நிறுவனத்தின் கீழ் இல்லாமல் தனியாக இயங்குகிறதா என்று கேள்வி எழுப்பினர். சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து மீடியா பிரிவுக்குத் தெரியாமல் போனதாகவும் இதன் காரணமாகவே அவர்கள் செய்தியாளர் சந்திப்பை நடத்தியதாகவும் தெரிவித்தனர்.

இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம், மீடியா பிரிவுக்குத் தெரியப்படுத்தி இருக்க வேண்டியது நிறுவனத்தின் கடமை என்றனர். மேலும், எந்த அடிப்படையில் உங்கள் மருந்து பிற மருந்துகளுக்கு மாற்று எனக் கூறுகிறார்கள் என்ற கேட்ட நீதிபதிகள் அறிவியல் ரீதியாக நிரூபணம் ஆகி உள்ளதா என்றும் சம்மந்தப்பட்ட அமைச்சகத்தில் எதாவது கோரிக்கை வைத்தீர்களா என்றும் கேட்டனர். இந்த வழக்கில் உரிய விளக்கத்தை அளிக்க உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், வழக்கு விசாரணையை ஏப்ரல் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

கடந்த ஆண்டு நவம்பரில் இந்திய மருத்துவ சங்கம் இது தொடர்பான வழக்கைத் தொடர்ந்தது. ​​பதஞ்சலி ஆயுர்வேத தனது மருந்துகள் பற்றிய விளம்பரங்களில் தவறான தகவல்களைக் கூறி வருவதாக அதில் கூறப்பட்டு இருந்தது. அலோபதி மற்றும் மருத்துவர்களை வேண்டுமென்றே மோசமாகக் காட்டுவதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது. குறிப்பாக நவீன மருந்துகளை எடுத்துக் கொள்ளும் மருத்துவர்களே உயிரிழக்கிறார்கள் என்றெல்லாம் அதில் இருக்கிறதாம். பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் இதுபோன்ற விளம்பரங்களை உடனடியாக தடுக்க வேண்டும் என்பதே வழக்கமாகும்.