“தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் செயல்படவில்லை. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் பாஜக வெற்றி பெறாது” என இந்திய கம்யூனிஸ்ட் மாநில தலைவர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேட்டூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் தலைவர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
18-வது மக்களவைத் தேர்தல் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடந்து வருகிறது. தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவோம் கூறி வருகின்றனர். இடங்களின் எண்ணிக்கைகளைப் பொறுத்து பாஜக கூறுவது மக்களை ஏமாற்றுகின்ற வேலை.
பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது. ஜனநாயகம் முறைப்படி எந்த கட்சி வேண்டுமானால் ஆட்சியில் இருக்கலாம். ஜனநாயகத்தை நிலை குலைத்து விட்டு, சர்வாதிகார ஆட்சி, பாசிச ஆட்சி நடத்துவது மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என மோடி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அமைப்புகளை சீர்குலைத்து விட்டு எதிர்க்கட்சிகளுக்கு எதிரான முறையில் செயல்பட கூடிய நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஐடி, இடி, சிபிஐ போன்ற அமைப்புகள் நிலைகுலைந்து மோடியின் உத்தரவை செயல்படுத்தக்கூடிய அமைப்புகளாக மாறிவிட்டன.
மோடி 2014-ல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எண்ணெய் நிறுவனங்கள் தான் தீர்மானம் செய்கின்றன, எங்களுக்கு சம்பந்தம் இல்லை என கூறுகின்றனர். ஆனால் தேர்தல் அறிவிப்பு பிறகு லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைக்க உத்தரவு அளித்ததாக கூறுகின்றனர்.
உத்தரவு போடுவதற்கான அதிகாரம் உள்ள மத்திய அரசு, விலை உயரும் போது உத்தரவு போட முடியாததுக்கான காரணம் என்ன? ஊழலை ஒழிப்பதற்காக தான் நாங்கள் அவதாரம் எடுத்திருக்கிறோம் என மோடி கூறுகிறார். ஊழல்வாதிகள் தான் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்திருக்கிறார்கள் என விமர்சனம் செய்கிறார்.
மோடிக்கு ஊழலை பற்றி பேச கடுகளவு கூட தகுதி இல்லை. தேர்தல் பத்திரம் ஊழல் குறித்து, உலக அளவில் இப்படிப்பட்ட ஓர் ஊழல் நடைபெறவில்லை என ஒன்றிய நிதியமைச்சர் கணவர் குற்றம் சாட்டியுள்ளார். மகா ஊழலை செய்துவிட்டு மற்ற கட்சிகளை பார்த்து குற்றம் சொல்வது தப்பித்துக் கொள்வதற்கான ஒரு முயற்சி. இந்த முயற்சிகள் வெற்றி பெறாது.
தமிழகத்துக்கு மோடி எத்தனை முறை வேண்டுமானாலும் வரலாம். தமிழ் மொழி, மக்கள் மீதும் பாசம் கொண்டதாகவும், புத்துணர்ச்சி பெற்று செல்வதாக கூறுகிறார். மொழிக்கு ஒதுக்கப்படுகின்ற வளர்ச்சியில் இந்தி, சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என தெரிவிக்க வேண்டும்.
பிரதமுருடைய பேச்சுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது. மாநில உரிமைகள் நீண்ட கால பிரச்சினையாக உள்ளது. தமிழக உள்பட நாற்பது தொகுதியில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். சீனாவால் அருணாச்சல பிரதேசத்தில் 30 கிராமங்களில் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இதனை மூடி மறைக்கவே கச்சத்தீவை பற்றி ஒரு நாடகத்தை மோடி நடத்தி வருகிறார்.
மக்களவைத் தேர்தல் ஜனநாயக முறைப்படி தான் நடப்பது நாட்டிற்கு நல்லது. தேர்தல் ஆணையம் ஜனநாயகம் முறையில் நூற்றுக்கு நூறு சதவீதம் இயங்குகிறது என்பது உறுதிப்படுத்த முடியவில்லை. தேர்தல் கால அட்டவணை தயாரிப்பது தேர்தல் ஆணையமா, மோடியா என தெரியவில்லை. மோடி தயாரித்து பட்டியலை தான் தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் பாரபட்சம் காண்பிக்கப்படுகிறது. ஆனால் பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் கட்சியின் சின்னம் எளிதாக கிடைக்கிறது. தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் செயல்படவில்லை. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் பாஜக வெற்றி பெறாது. இவ்வாறு அவர் கூறினார்.