காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புரட்சிகரமானதாக இருக்கிறது: திருமாவளவன்!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நம்பிக்கையளிப்பதாகவும், சில அறிவிப்புகள் புரட்சிகரமானதாக இருப்பதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் 7 கட்டங்களாக நாடு முழுவதும் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த முறை மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், மாநில கட்சிகளை ஒருங்கிணைத்திருக்கிறது. ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்டவற்றை இணைத்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், இன்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இதில், வேலைவாய்ப்பு, பெண்கள் நலன், கல்வி, அரசியலமைப்பு, அரசு துறை உள்ளிட்டவற்றில் கொண்டுவர இருக்கும் மாற்றங்கள் குறித்து காங்கிரஸ் அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் காங்கிரசின் தேர்தல் அறிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்றிருக்கிறது. இந்த அறிக்கை நம்பிக்கை அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

விளிம்பு நிலை மக்களுக்கு பெரும் ஆறுதல் அளிக்கக்கூடிய, புரட்சிகரமான திட்டங்களை கொண்டுள்ளதாக இந்த தேர்தல் அறிக்கை இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்களையும், நாட்டையும் மீட்பதற்கான அறிக்கையாக இது இருக்கிறது. அதேநேரம் நாட்டின் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை சீர் செய்வதற்கான வாக்குறுதிகளையும் கொண்டிருக்கிறது. மாநில உரிமைகளை பாதுகாக்கும் அறிக்கையாகவும் இது இருப்பது நிம்மதியளிக்கிறது. மேலும் பெண்களுக்கு மத்திய அரசு பணிகளில் 50% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அறிவிப்பு புரட்சிகரமானது. அதேபோல இடஒதுக்கீடு உச்சவரம்பான 50%-ஐ நீக்குவோம் என்று காங்கிரஸ் அறிவித்திருப்பது விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பதாக இருக்கிறது.

பாஜக அரசு உருவாக்கியுள்ள புதிய கல்விக்கொள்கை, மாநில அரசுகளுடன் கலந்து பேசி உரிய திருத்தங்களுடன் மாற்றியமைக்கப்படும் என்கிற வாக்குறுதி போற்றுதலுக்குரியது. நீட், கியூட் போன்ற நுழைவு தேர்வுகள் அந்தந்த மாநில அரசுகளின் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்துக்கொள்ளலாம் என்று கூறியிருப்பது, மாநில அரசுகளுக்கான உரிமையை வழங்கும் அறிக்கையாக இந்த தேர்தல் அறிக்கை இருப்பதை காட்டுகிறது. மாநில பட்டியலில் உள்ள அம்சங்கள் மாற்றியமைக்கப்படும் என்று கூறியிருப்பது, மாநில மக்களின் உரிமைகளை மதிப்பதாக இருக்கிறது. பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கு வழங்கப்படும் 10% இடஒதுக்கீடு என்பது, அனைத்து வகுப்பினருக்கானதாகவும் மாற்றப்படும் என்கிற அறிவிப்பு வரவேற்புக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.