கடன் வாங்குவதிலும், போதைப் பொருள் விற்பனையிலும் தமிழகம் முன்னோடி மாநிலம்: குஷ்பு

கடன் வாங்குவதிலும், போதைப் பொருள் விற்பனையிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என நடிகை குஷ்பு விமர்சனம் செய்தார்.

வேலூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட ஆலங்காயம், உதயேந்திரம் பேரூராட்சிகள் பகுதிகளில் நடிகை குஷ்பு தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

‘தேச வளர்ச்சிக்கு என்ன தேவை என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். ஒரு மனிதன் வாழ உண்ண உணவு, உடுத்த உடை, வசிக்க வீடு. இந்த மூன்றும் அத்தியாவசியம். இதை பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் நமக்கு கொடுத்துள்ளார். ஆனால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் என்ன செய்தார் என கேள்வி கேட்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு 2 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. தமிழகத்துக்காகவும், தமிழர் களுக்காகவும் பிரதமர் மோடி ஏராளமாக செய்துள்ளார்.

இங்குள்ள ஒரு அமைச்சரின் மகன் பெண்களை பார்த்து 1,000 ரூபாய் தருவதால் மேக்கப்போட்டு, பளபளப்பாக இருப்பதாக கூறி பெண்களை கிண்டல் செய்கிறார். இவர்கள் கொடுக்கும் 1,000 ரூபாயில் தான் பெண்கள் அழகாக இருக்கிறார்களா என்ன?

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் விற்பனை, சாராயம் விற்பனை என சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழகம் கடன் வாங்குவதிலும், போதைப் பொருள் விற்பனையிலும் முன்னோடி மாநிலமாக உள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதி வளர்ச்சி பெற தாமரைக்கு வாக்களித்து ஏ.சி.சண்முகத்தை வெற்றி பெற செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.