அரவிந்த் கெஜ்ரிவாலின் ஐபோனிலிருந்து தகவல்களை எடுத்துத் தர ஆப்பிள் நிறுவனம் மறுப்பு!

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஐபோனிலிருந்து தகவல்களை எடுத்துத் தருவதற்கு ஆப்பிள் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதாகியுள்ள அம்மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை காவல் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கெஜ்ரிவாலை வரும் 14-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஹவாலா பணம் கிடைத்ததாகவும், அதனை அவர்கள் கோவா சட்டப்பேரவை தேர்தலுக்கு பயன்படுத்தியதாகவும் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது. மேலும், இதற்கான ஆதாரம் இருக்கிறது. ஆனால் கெஜ்ரிவால் ஆப்பிள் ஐபோன் மற்றும் ஆப்பிள் மடிக்கணினியின் கடவுச்சொல்லை (பாஸ்வேர்ட்) கூறவில்லை. இதனால் எங்களால் டிஜிட்டல் ஆவணங்களை கைப்பற்ற முடியவில்லை என்றும் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் கெஜ்ரிவாலின் ஐபோன் மற்றும் லேப்டாப்பை ஹேக் செய்து தகவல்களை எடுக்க உள்ளதாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூறியிருந்தது. இதைத் தொடர்ந்து ஐபோன், லேப்டாப்பிலிருந்து தகவல்களை எடுத்துத் தருமாறு ஆப்பிள் நிறுவனத்திடம் அமலாக்கத்துறை உதவி கோரியதாக கூறப்படுகிறது. அப்போது ஆப்பிள் நிறுவனம், ஐபோன் உரிமையாளர் நினைத்தால் மட்டுமே இதனை திறக்க முடியும் என்றும் தங்களால் முடியாது என்றும் கை விரித்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே சில உலகத் தலைவர்களின் ஐபோன்களில் இருந்து தகவல்களை எடுத்துத் தருமாறு கேட்டபோது ஆப்பிள் நிறுவனம் கைவிரித்திருந்தது.

சவுதி விமானப்படையின் 2-வது லெப்டினன்டான சயீத் அல்ஷாம்ரனியின் செல்போனிலிருந்து தகவல்களை எடுத்துத் தருமாறு ஆப்பிள் நிறுவனத்திடம் அமெரிக்க எஃப்பிஐ கேட்டது. 2020-ல் மூன்று அமெரிக்கர்களை சயீத் கொன்ற விவகாரத்தில் விசாரணை நடத்தியபோது இந்தத் தகவலை அமெரிக்கா கேட்டது. ஆனால் ஆப்பிள் நிறுவனம் அதற்கு மறுப்பு தெரிவித்தது.