லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், இந்தியா கூட்டணி கமிஷனுக்காக அமைக்கப்பட்டது என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்திருக்கிறார்.
லோக்சபா தேர்தலை பொறுத்த அளவில் கடந்த 2019 ஆண்டை போலவே இந்த முறையும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் எப்படியாவது 370 தொகுதிகளை கைப்பற்றிவிட வேண்டும் என்று பாஜக தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் தனது பரப்புரையை பிரதமர் மோடி தீவிரப்படுத்தியுள்ளார். லோக்சபா தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் உ.பியை முழுமையாக வசப்படுத்த முயல்வார்கள். ஏனெனில் நாட்டில் வேறு எந்த மாநிலத்தில் உள்ள லோக்சபா தொகுதிகளை விட உத்தரப் பிரதேசத்தில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை அதிகம். 80 தொகுதிகளை கொண்ட உ.பியில் இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று உ.பியின் சஹாரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய மோடி, “கமிஷனுக்காகதான் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்த இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன” என்று விமர்சித்துள்ளார். மேலும் அவர் பேசியதாவது:-
காங்கிரஸின் ஆட்சியில் கமிஷன் சம்பாதிப்பதில்தான் கவனம் இருந்தது. இந்திய கூட்டணியும் ஆட்சிக்கு வந்த பிறகு கமிஷன் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும். ஆனால் என்டிஏ கூட்டணி அப்படியானது கிடையாது. ‘சக்தியை’ வழிபடுவது நமது இயற்கையான ஆன்மீக பயணத்தின் ஒரு பகுதியாகும். ஆனால், இந்திய கூட்டணியின் தலைவர்கள் தங்கள் போராட்டம் சக்திக்கு எதிரானது என்று கூறுகிறார்கள். இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சியை பாருங்கள். அவர்கள் ஒவ்வொரு மணி நேரமும் வேட்பாளர்களை மாற்றுகிறார். மறுபுறம் காங்கிரஸ் கட்சிக்கு வேட்பாளர்களே இல்லை. காங்கிரஸின் பலம் வாய்ந்த தொகுதியில் கூட அவர்களால் தைரியமாக வேட்பாளர்களை நிறுத்த முடியவில்லை” என்று விமர்சித்துள்ளார்.