திருச்சியில் ஜேபி நட்டாவின் வாகன பேரணிக்கு போலீஸ் அனுமதி மறுப்பு!

திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமயபுரம் கோவில் பூச்சொரிதல் விழா, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவற்றை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி உள்ளது. தமிழ்நாட்டில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். இந்நிலையில் தமிழக தேர்தல் பிரசாரத்துக்காக இன்று இரவு திருச்சிக்கு பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா வருகை தர உள்ளார். நாளைய தினம் அவர் திருச்சியில் போட்டியிடும் பாஜகவின் கூட்டணியின் அமமுக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். அதன்படி நாளை திருச்சியில் ஜேபி நட்டாவின் வாகன பேரணிக்கு (ரோடு ஷோ) ஆன்லைன் மூலம் போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. கடந்த 36 மணிக்கு நேரத்துக்கு முன்பு அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. திருச்சி காந்தி மார்க்கெட் முதல் சத்திரம் பேருந்து நிலையம், அண்ணாசிலை, தெப்பக்குளம் மலைக்கோட்டை வரை ஜேபி நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி கேட்கப்பட்டது.

இந்நிலையில் தான் ஜேபி நட்டாவின் வாகன பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். நாளை சமயபுரம் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது. இதில் அதிகமான பக்தர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனக்கூறி போலீசார் பாஜகவினர் கேட்ட ஜேபி நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். மேலும் ஜேபி நட்டாவின் வாகன பேரணிக்கு மாற்றுப்பாதையை தேர்வு செய்யும்படி போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர். ஆனால் பாஜகவினர் திட்டமிட்ட பாதையில் வாகன பேரணி நடத்துவதில் உறுதியாக உள்ளன. இதனால் குழப்பம் நிலவி வருகிறது.