தீவிரவாதிகள் பாகிஸ்தான் ஓடினாலும் சுட்டுக்கொல்வோம்: ராஜ்நாத் சிங்!

இந்தியாவில் பயங்கரவாத செயல்களை செய்துவிட்டு, தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றாலும் அவர்களை அங்கேயே சென்று கொல்லுவோம் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார்.

கடந்த சில நாட்களாக இந்திய உளவுத்துறையான ‘ரா’ குறித்து சர்வதேச அளவில் பேச்சுகள் அடிப்பட்டு வருகின்றன. குறிப்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், கனடாவில் சீக்கிய தலைவர் கொலை வழக்கில் இந்திய உளவாளிகள் குறித்து அந்நாட்டு அரசு வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தது. அதேபோல, அமெரிக்காவில் சீக்கிய தலைவரை கொல்ல நடத்தப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. இந்த பின்னணியில் இந்தியா இருப்பதாக அமெரிக்கா கூறியிருந்தது. இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தானில் நடந்த 20க்கும் மேற்பட்ட கொலையில் இந்தியா இருப்பதாக பிரிட்டனின் கார்டியன் இதழ் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. அதாவது, புல்வாமா தாக்குதலுக்கு காரணமானவர்கள் பாகிஸ்தானில் கொல்லப்பட்டிருக்கின்றனர். லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர் ரியாஸ் அகமது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ராவலகோட்டில் உள்ள அல் குத்தூஸ் மசூதிக்கு வெளியே கொல்லப்பட்டார். காலிஸ்தான் கமாண்டோ படையின் தலைவரான பரம்ஜித் சிங் பஞ்வார் கடந்த மே மாதம் லாகூரில் உள்ள தனது இல்லத்திற்கு அருகே காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். எல்.ஈ.டி செயல்பாட்டாளர்களான மௌலானா ஜியாவுர் ரஹ்மான் ஆகியோரும் கடந்த ஆண்டு கராச்சியின் குலிஸ்தான்-இ-ஜவுஹார் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 2016ம் ஆண்டு பதான்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய ஃபிதாயீன் குழுவின் முக்கிய தலைவரான ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி ஷாஹித் லத்தீப், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி சியால்கோட்டில் உள்ள மசூதியில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுபோன்ற 20க்கும் அதிகமான பெயர்களை பாகிஸ்தான் அடுக்கியுள்ளது. இதற்கு இந்தியாதான் காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளது. இதைத்தான் கார்டியன் இதழ் கூறியிருந்தது. ரஷ்யாவின் கேஜிபி, இஸ்ரேலின் மொசாட் உள்ளிட்ட உளவு அமைப்புகளின் பாணியில் இந்தியாவும் செயல்பட தொடங்கியுள்ளது என்று குற்றம்சாட்டியது. இதற்காக தனியாக ஒரு அமைப்பையும் இந்தியா உருவாக்கியிருப்பதாக கார்டியன் கூறியிருந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய வெளியுறவுத்துறை மறுப்பு தெரிவித்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக கார்டியன் செய்தி குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கூறியுள்ள கருத்துக்கள் பெரும் கவனம் பெற்றிருக்கிறது. அதாவது தனியார் செய்தி ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “இந்தியாவில் பயங்கரவாத செயல்களை செய்துவிட்டு, தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றாலும் அவர்களை அங்கேயே சென்று கொல்லுவோம். இந்தியா எப்போதும் எந்த நிலப்பரப்பையும் ஆக்கிரமிக்க முயன்றதில்லை. நாங்கள் அமைதியை விரும்புகிறோம். ஆனால், எங்கள் நிலத்தில் தீவிரவாதத்தை கட்டவிழ்க்க விரும்பினால் அதை செய்யும் நபரை நாங்கள் சும்மா விடமாட்டோம்” என்று கூறியுள்ளார்.