“பாமகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் தமிழகத்தில் 2026-ல் திமுக, அதிமுக இல்லாத கூட்டணி ஆட்சி அமையும்” என செய்யாறில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
ஆரணி மக்களவைத் தொகுதியின் பாமக வேட்பாளர் கணேஷ்குமாரை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நேற்று இரவு நடைபெற்றது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையை நிறுவனர் ராமதாஸ் வைத்து வருகிறார். நிர்வாகத்துக்கு ஏதுவாக பிரிக்க வேண்டும். ஆனால், அமைச்சர் எ.வ.வேலு தடையாக உள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்துக்கு கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்தபோது, 13 வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் கொடுத்துள்ளார்.
நந்தன் கால்வாய் திட்டம், அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும், கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையம், ஆரணியில் பட்டு ஜவுளி தொழிற்சாலை மற்றும் ஜவுளி பூங்கா, ஆரணி மற்றும் செய்யாறில் புதிய பேருந்து நிலையம், செய்யாறில் இஎஸ்ஐ மருத்துவமனை, வந்தவாசி பாலிடெக்னின் கல்லூரி, கீழ்பென்னாத்தூரில் தொழிற் பயிற்சி நிலையம், செங்கம், கலசப்பாக்கம் மற்றும் தண்டராம்பட்டில் நறுமண தொழிற்சாலை, கலசப்பாக்கம், செய்யாறு மற்றும் செங்கத்தில் குளிர்பதன உணவு கிடங்குகள், பெரணமல்லூரியில் தானிய கிடங்கு, மேல்செங்கத்தில் வேளாண்மை கல்லூரி, செய்யாறு – தென்பெண்ணையாறு இணைப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும், சாத்தனூர் – கடலாடி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும் என 3 ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த 13 வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. கோரிக்கையை நிறைவேற்றாத திமுகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும். மக்கள் நலனுக்காக ஐநா மன்றத்தில் பேசிய பாமக வேட்பாளர் கணேஷ்குமாருக்கு வாக்களியுங்கள்.
தமிழகத்தில் அதிக போதை பொருள் புழக்கத்தில் உள்ள மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டமாகும். போதை பழக்கத்துக்கு அடிமையாகி இளைஞர்கள் சீரழிந்துள்ளனர். சாராயத்தை கொடுத்து 3 தலைமுறையை நாசப்படுத்திவிட்டனர். போதை இல்லாத, மது இல்லாத தமிழகம் இருக்க வேண்டும். அமெரிக்காவில் கிடைக்கும் போதை, இங்கு கிடைக்கிறது. 57 ஆண்டுகள் இரு திராவிட கட்சிகள் ஆட்சி செய்தது போதும். ஸ்டாலின் மற்றும் பழனிசாமிக்கு தொலைநோக்கு சிந்தனை உள்ளதா?. எந்த நல்லதையும் அவர்கள் கொண்டுவரவில்லை. இரு கட்சிகளும் காலாவதியான கட்சிகள். அதனால்தான், பாஜகவுடன் கூட்டணி அமைத்தோம். இது காலத்தின் கட்டாயம். பாமக வேட்பாளரை வெற்றி பெற செய்தால், தமிழகத்தில் 2026-ல் திமுக மற்றும் அதிமுக இல்லாத கூட்டணி ஆட்சி அமையும். மூன்றவாது முறையாக மோடி பிரதமராக வருவார்.
செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டை அவசியம் வேண்டும். ஆனால், விளை நிலங்களை அழித்து, முப்போகம் விளையும் நிலங்களை அழிக்க வேண்டும். விளை நிலங்களை அழித்தால், சோறு கிடைக்காது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் சோறு போட்ட மண். மேலும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் சோறு போடப்போகும் மண்.
தாய், தந்தைக்கு பிறகு விவசாயிகளை கடவுளாக பார்க்கிறேன். விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்கும் கட்சி பாமக. அழிக்கும் கட்சி திமுக. அவர்களுக்கும் விவசாயத்துக்கு சம்மதம் இல்லை. விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்கின்றனர். சாராயம், போதை பொருள் விற்பனை செய்பவர்கள் வெளியே சுற்றுகின்றனர்.
திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால், பாமக வேட்பாளரை நீங்கள் ஆதரிக்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்தார். மனசார இட ஒதுக்கீட்டை கொடுத்தார். உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. அதன்பிறகு பழனிசாமியும், முன்னாள் அமைச்சர்கள் யாரும், சட்டப்பேரவையில் பேசவில்லை. பாமகவின் 5 எம்எல்ஏக்கள்தான், கருப்புச் சட்டை அணிந்து பேசினர். ஆட்சிக்கு வந்ததும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம் திட்டத்தை கொண்டு வருவோம் என்று வாக்குறுதி அளித்த திமுக, எதையும் கொடுக்கவில்லை.
பாஜக – பாமக கூட்டணிக்கு வாக்களித்தால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துவிடுவார். சிந்தித்து வாக்களியுங்கள். பாமக வேட்பாளர் கணேஷ்குமாருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.