நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் ரெய்டு நடத்த வேண்டும் என சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. முதற்கட்ட தேர்தலிலேயே ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலுக்கு வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா, பரிசு பொருட்கள் உள்ளிட்ட எதையும் வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி யாரேனும் செயல்பட்டால், அவர்கள் மீது தக்க நடவடிக்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தேர்தல் அதிகாரிகள், போலீசார், கண்காணிப்பு நிலைக்குழுவினர் என அனைவரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் நேற்று இரவு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி பணத்தை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரது சகோதரர் நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் என்று தெரியவந்தது. இந்த ரூ.4 கோடி பணத்தை நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், நயினார் நாகேந்திரன் இதனை மறுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 6 பைகளில் ரூ.500 கட்டு நோட்டுகளுடன் பிடிபட்ட கும்பல் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நெல்லை பாஜக எம்.எல்.ஏவும், நெல்லை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவரது உறவினர்கள், நண்பர்கள் என பலரது வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது வேஷ்டி, சேலை, ரூ.2 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நெல்லை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும், அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும் ரெய்டு நடத்த வேண்டும் என சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். ரூபாய் 4 கோடி பணம் எடுத்துச் சென்ற நயினார் நாகேந்திரனின் விடுதி ஊழியர்கள் பிடிபட்டதை சுட்டிக்காட்டி, பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சார்பில் சிபிஐஎம் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.