காவிரி – குண்டாறு திட்டத்தை முடக்கியது திமுக: எடப்பாடி பழனிசாமி!

“ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு காவிரி – குண்டாறு திட்டத்தைக் கொண்டு வந்தது அதிமுக. ரூ.14,000 கோடியில் தொடங்கப்பட்ட அந்த திட்டத்தை திமுக அரசு முடக்கிவிட்டது” என்று ராமநாதபுரத்தில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

ராமநாதபுரத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெயபெருமாளை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திங்கள்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலை நம்பி இருக்கிறது. இந்த இரண்டு தொழில்களும் செழிக்க வேண்டும் என்பதற்காக, ஏராளமான திட்டங்களை வாரி வழங்கியது அதிமுக அரசு.
ராமநாதபுரம் ஒரு வறட்சியான மாவட்டம், மழையை நம்பி வேளாண்மை பணிகளில் ஈடுப்பட்டுள்ள மாவட்டம் இது. இந்த மாவட்டத்தை பசுமையான செழுமையான பகுதியாக மாற்ற வேண்டும் என்று நான் எண்ணினேன். நானும் ஒரு விவசாயி என்பதால், அவர்களது கஷ்டம் அனைத்தும் எனக்கு தெரியும். எனவே, அவர்களது துன்பம் களையப்பட வேண்டும் என்பதற்காக ரூ.14,000 கோடியை மாநில நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்து காவிரி – குண்டாறு திட்டத்தைக் கொண்டு வந்தது அதிமுக.

நான் முதல்வராக இருந்தபோது கொண்டு வந்த காவிரி – குண்டாறு திட்டத்தை புதுக்கோட்டையில் தொடங்கி வைத்தேன். முதல்கட்டமாக ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டது. பிரமாண்டமான கால்வாய் கட்டப்பட்டது. 6000 கன அடி தண்ணீரை அந்த கால்வாயின் வழியே ராமநாதபுரம் வரை கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்டது அதிமுக ஆட்சியில்தான். தமிழகத்தில் விவசாயிகளுக்காக இத்தனை கோடி நிதி ஒதுக்கீடு செய்தது கிடையாது. விவசாயிகள் மற்றும் ராமநாதபுரம் மக்களின் நலன் கருதி இத்திட்டத்தைக் கொண்டு வந்ததது அதிமுக அரசாங்கம். ஆனால், இந்த திட்டத்தையும் திமுகவினர் முடக்கிவிட்டார்கள். அவர்கள் உங்களிடம் வாக்கு கேட்டு வரும்போது கேளுங்கள், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட காவிரி-குண்டாறு திட்டத்தை ஏன் முடக்கினீர்கள் என்று கேள்வி கேளுங்கள்.

இன்று தமிழகத்தில் அதிமுக ஆட்சி இருந்திருந்தால், அந்தத் திட்டம் முழுமை பெற்றிருக்கும். இப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு காவிரி தண்ணீர் கிடைத்திருக்கும். அதை தடுத்து நிறுத்தியது திமுக அரசும், முதல்வர் ஸ்டாலினும்தான். இவர்களா நன்மை செய்வார்கள்? இவர்களுக்காக நீங்கள் வாக்களிக்கப் போகிறீர்கள்?

வேண்டுமென்றே திட்டமிட்டு விவசாயிகளை அலட்சியப்படுத்தி, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்யும் விதமாக இந்த அற்புதமான பெரிய திட்டத்தை திமுக அரசு முடக்கியிருப்பது நியாயமா? இந்த திட்டத்தை செயல்படுத்தியிருந்தால், இப்பகுதியில் வைகையில் தண்ணீர் கரை புரண்டோடும். ஏரி, குளங்கள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயரும். காவிரி – குண்டாறு திட்டம் நிறைவேற்றப்படும்போது, 2 லட்சம் ஏக்கர் அளவு வேளாண்மைக்கும், குடிநீரும் கிடைக்கும். இந்த திட்டத்தை முடக்கிய அரசு திமுக அரசு. இவ்வாறு அவர் பேசினார்.