சாட்டை துரைமுருகனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளரும், யூடியூபருமான சாட்டை துரைமுருகனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கு தொடர்ச்சி மலைகள் வெட்டி கேரளாவுக்கு கடத்தப்படுவதாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு காவல்துறை சார்பில் அனுமதி அளிக்கப்படவில்லை. அப்படி இருக்கையில் இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய, சாட்டை துரை முருகன் முதலமைச்சர் குறித்து தனிப்பட்ட முறையில் அவதூறாக பேசியிருக்கிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை, அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இவர் ஏற்கெனவே தஞ்சாவூரில் இதேபோன்று அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டார். கைதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தபோது, இனி இதுபோன்று அவதூறு பேசக்கூடாது என்று கூறி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. ஆனால், குமரி ஆர்ப்பாட்டத்தில் அவதூறாக பேசிய நிலையில், சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட வேண்டும் என்று காவல்துறை உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தது. காவல்துறையின் கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம் ஜாமீனை ரத்து செய்தது. ஆனால், இதனை எதிர்த்து சாட்டை துரைமுருகன் உச்சநீதிமன்றத்தை நாடினார்.

இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் மாநில அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்திகி ஆஜராகியிருந்தார். அவரிடம் நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக, “யூடியூபில் அவதூறு கருத்துக்களை பேசுபவர்களை சிறையில் அடைக்க வேண்டும் எனில், எத்தனை பேரை தேர்தலுக்கு முன்னர் அடைக்க வேண்டியதாக இருக்கும் தெரியுமா?” என்று கேட்டனர். பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்குவதாக நீதிமன்றம் கூறியது. ஆனால், இதன் பின்னரும் அவர் அவதூறாக பேசக்கூடாது என்று வழக்கறிஞர் வலியுறுத்தினார். ஆனால், நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. மறுபுறம், மீண்டும் அவதூறான கருத்துக்களை பேசும் பட்சத்தில் பிணையினை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தை நாடலாம் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனுமதியளித்தனர். தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், சாட்டை துரைமுருகனுக்கு நீதிமன்றம் ஜாமீனை உறுதி செய்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ளது.