தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போதுமான மருத்துவமனைகள் இல்லை என்று பாஜக வேட்பாளா் தமிழிசை சவுந்தரராஜன் கூறுவது உண்மையல்ல என்று அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தென் சென்னை தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் சோழிங்நல்லூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் கூறியதாவது:-
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான மருத்துவமனைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 708 நகா்ப்புற ஆராம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்து, கடந்த 2023-ஆம் ஆண்டில் மட்டும் முதற்கட்டமாக 500 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை ஒரே நாளில் முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத்தாா். குறிப்பாக தென் சென்னை பகுதியில் மட்டும் 20 மருத்துவமனைகள் திறந்துவைக்கப்பட்டன. மேலும், பெரும்பாக்கத்தில் ரூ. 71 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள பன்னோக்கு மருத்துவமனையின் சிறப்பம்சங்கள் போல இந்தியாவில் வேறு எந்த அரசு மருத்துவமனையிலும் கிடையாது. தற்போது கிண்டி கலைஞா் பன்னோக்கு மருத்துவமனையில் மட்டும் 105 மருத்துவா்கள் பணியாற்றி வருகின்றனா். ஆனால், தென் சென்னை பகுதிகளில் போதுமான மருத்துவமனைகளும், மருத்துவா்களும் இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறுகிறாா். தென் சென்னை மக்களவைத் தொகுதியில் எத்தனை மருத்துவமனைகள் உள்ளது என்பதை எங்கள் சொந்த செலவில் சுற்றிக் காட்டுகிறோம், தமிழிசை சவுந்தரராஜன் அதற்கு தயாரா?. இவ்வாறு அவர் கூறினார்.