“மனு நீதி பேசும் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்தது ஏன்?” என்று தருமபுரி தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணிக்கு ஆதரவு கேட்டு தருமபுரி நகரில் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வேனில் இருந்தபடி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து சமூக நீதியை பேசி வருகிறார். ஆனால், சமூக நீதிக்கு நேர் எதிரான மனு நீதி கொள்கை கொண்ட பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்தது ஏன் என்பது தெரியவில்லை. 1989-ல் மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இடஒதுக்கீடு கோரி கடும் போராட்டங்கள் நடந்தன. இந்தப் போராட்டத்தில் வன்னியர் சமூகத்தினர் 21 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருப்பினும், அன்றைக்கு ஆட்சியில் இருந்த அதிமுக அரசு அம்மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை. அதைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த திமுகவின் முதல்வர் கருணாநிதி மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினார். அந்தப் போராட்டத்தில் உயிரிழந்தோர் நினைவாக இன்றைய முதல்வர் ஸ்டாலின், விக்கிரவாண்டியில் நினைவு மண்டபம் கட்டிக் கொண்டிக்கிறார். இது விரைவில் திறக்கப்பட உள்ளது.
கடந்த 2021-ல் தேர்தலின்போது அவசர கதியில் வன்னியர் சமூக மக்களுக்கு அன்றைய அதிமுக அரசு 10.5 சதவீதம் சிறப்பு உள் ஒதுக்கீடு வழங்கியது. இதனால்தான் இந்தச் சட்டத்தை நீதிமன்றம் தடை செய்தது.
இருப்பினும், பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக 10.5 சதவீதம் சிறப்பு இடஒதுக்கீடு வழங்க பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதில் வெற்றி கண்டு நிச்சயம் அச்சமூக மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.
கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக தமிழர்களையும், தமிழகத்தையும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. மொழியுரிமை, இட உரிமை, நிதியுரிமை என எல்லாவற்றிலும் தமிழர்களுக்கு பிரதமர் அநீதியை மட்டுமே இழைத்து வருகிறார். தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளின்போது வருகை தந்து மக்களை பார்த்திராத பிரதமர், வெள்ள நிவாரணம் கேட்டபோது ஒரு பைசா கூட நிதி வழங்காத பிரதமர் தற்போது தேர்தலுக்காக தமிழகத்துக்கு 5 முறை வந்து சென்றுள்ளார். தேர்தலுக்கு மட்டுமே தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமருக்கு தமிழக வாக்காளர்கள் சரியான பாடத்தை கற்பிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஆனால், மதுரையில் தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவே இல்லை.
10 ஆண்டுகளாக சமையல் எரிவாயு விலையை ஏற்றிக் கொண்டே வந்த மத்திய அரசு, தேர்தலையொட்டி மகளிர் தினத்தன்று ரூ.100 குறைத்திருப்பது நாடகம். இண்டியா கூட்டணி ஆட்சியமைத்தால் சமையல் எரிவாயு விலை ரூ.500 ஆக குறைக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 1 கோடியே 16 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள தகுதியான மகளிருக்கு தேர்தலுக்கு பிறகு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை சிற்றுண்டித் திட்டம் மாணவர்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்தத் திட்டத்தை தெலங்கானா அரசும், கர்நாடாக அரசும் செயல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். அதேபோல, கனடா நாட்டு அரசும் தமிழகத்தின் இந்த காலை சிற்றுண்டி திட்டத்தை தன் நாட்டில் நடைமுறைப் படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நடைமுறை படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் பிற மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன. இதேபோல, கல்லூரி மாணவிகளுக்கான புதுமைப் பெண் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலம் இதேபோன்று உதவித் தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான காவிரி மிகை நீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, தருமபுரி – சேலம் 4 வழிச்சாலை 6 வழிச்சாலையாக மாற்றியமைக்கப்படும். தருமபுரி – மொரப்பூர் இணைப்பு ரயில் பாதை திட்டம் செயல் படுத்தப்படும். ஏற்கெனவே இருந்த திமுக மக்களவை உறுப்பினரின் முயற்சியால் ரூ.7750 கோடி மதிப்பில் ஒகேனக்கல் இரண்டாம் கட்ட கூட்டுக் குடிநீர் திட்டம், ரூ.750 கோடியில் தொப்பூர் கணவாய் பகுதியில் உயர்மட்ட சாலை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதிகளை திமுக அரசு நிச்சயம் நிறைவேற்றும்.
எனவே, தமிழகத்தை வஞ்சித்து வரும் பாஜகவையும், அவர்களோடு கூட்டணியாக இருந்து தற்போது பிரிந்து நிற்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிற அதிமுக கூட்டணியையும் வீழ்த்தி திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வேண்டும். இவ்வாறு உதயநிதி பேசினார்.