​ஓபிஎஸ் எதிரான சொத்து குவிப்பு வழக்கு வரும் 22ம் தேதிக்கு தள்ளிவாய்ப்பு!

ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வரும் 22ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் 2001 – 2006 அதிமுக அரசில் பொதுப் பணித் துறை, வருவாய்த் துறை அமைச்சராகவும் சில மாதங்கள் முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். இந்த சமயத்தில் வருமானத்திற்கு அதிகமாக 1.77 கோடி ரூபாய் முறைகேடாக சொத்து சேர்த்தாக ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் ஓ.ராஜா, மகன் ரவீந்திரநாத் ஆகியோர் மீது 2006 திமுக அரசில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் 2009ஆம் ஆண்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. முதலில் தேனி நீதிமன்றத்திலும் பின்னர் சிவகங்கை நீதிமன்றத்திலும் விசாரணை தொடர்ந்தது. 2011ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக அரசு மீண்டும் அமைந்தது. அப்போது, ஓபிஎஸ் மீதான வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத் துறை மனு அளித்தது. இதனை ஏற்று வழக்கில் இருந்து ஓபிஎஸ்-ஐ 2012ஆம் ஆண்டு சிவகங்கை நீதிமன்றம் விடுவித்தது. இந்த வழக்கு விசாரணை நடந்து முடிந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஓபிஎஸ் மீதான சொத்து குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து மறுஆய்வுக்கு எடுத்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். வழக்கு முடிந்துவிட்டது என்று இருந்த சூழலில் இது ஓபிஎஸ் தரப்புக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் மறுஆய்வு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தை நாடினார். எனினும், வழக்கினுடைய தன்மை, தகுதியின் அடிப்படையிலேயே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்கிறார் என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், இதில் தலையிட விரும்பவில்லை என்று குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

கடந்த மார்ச் 25ஆம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில், “தலைமை வழக்கறிஞர், குற்றவியல் வழக்கறிஞர் ஆலோசனையை பெற்ற பிறகுதான் வழக்கை முடித்து வைக்க லஞ்ச ஒழிப்புத் துறை மனு தாக்கல் செய்தது. லஞ்ச ஒழிப்புத் துறையே வழக்கை முடித்து வைக்க அறிக்கை தாக்கல் செய்த நிலையில், ஓபிஎஸ் உள்ளிட்டோரை விடுவிக்க காரணம் எதுவும் தேவையில்லை” என்று வாதிடப்பட்டது.

இவ்வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாதங்களை முன்வைக்க அவகாசம் வேண்டும் என்று கோரினார். இதனை ஏற்ற நீதிபதி வழக்கை வரும் 22ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். அன்றைய தினம் ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.