“பிரதமர் மோடி ஒரே ஒரு முறை பத்திரிகையாளர்களை சந்தித்தால், நாங்கள் தேர்தலில் இருந்து விலகிவிடுகிறோம்” என்று பிரதமர் மோடிக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அந்தியூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்போது சீமான் பேசியதாவது:-
பத்தாண்டு கால ஆட்சியில் தங்களது ஒரு சாதனையை பாஜக சொல்ல சொல்லுங்கள், நாங்கள் இப்போதே போட்டியில் இருந்து விலகி கொள்கிறோம். ஒரு நல்லது அவர்களால் இந்த பத்தாண்டு கால ஆட்சியில் சொல்ல முடியுமா. பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்துவிட்டு இனிமேல் புதிய இந்தியாவை உருவாக்க வாய்ப்பு வந்துவிட்டது என்கிறார் பிரதமர் மோடி. பத்தாண்டுகள் காங்கிரஸ், பத்தாண்டுகள் பாஜக என என் வாழ்நாளில் பாதி கழிந்துவிட்டது. ஆனால், இந்த நாட்டில் என்ன நடந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி முடிந்தபிறகு வந்த மோடி இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறினார். சொன்னபடி கொடுத்தாரா இல்லையே.
15 லட்சம் தருவதாக சொன்னார். அதை அப்படியே மக்கள் நம்பிவிட்டனர். பிரதமர் மோடி ஒரு நல்ல தலைவர், நல்ல ஆட்சியாளர் என்றால் ஒரே ஒரு முறை பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும். பிரதமர் மோடி ஒரே ஒரு முறை பத்திரிகையாளர்களை சந்தித்தால் நாங்கள் போட்டியில் இருந்து வாபஸ் பெற்றுவிடுகிறோம். மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் பிஎம்கேர்ஸ்க்கு எதிராக கேள்விகளை கேட்டார். அவர் கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் மோடியிடம் பதில் இல்லை. எல்லோருக்கும் அவரவர்கள் சின்னத்தை கொடுக்கும்போது எனக்கு மட்டும் விவசாயி சின்னத்தை பறித்தார்கள். ஏனென்றால் பயம் தான் காரணம். நாங்கள் முன்வைக்கிற அரசியல் அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு சீமான் கூறினார்.
பின்னர் ஈரோடு லோக்சபா தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கார்மேகன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த சீமான், பாஜகவைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அங்கே சீமான் பேசியதாவது:-
தமிழ் மக்களிடையே அநீதி, லஞ்சம், ஊழல், இயற்கை சுரண்டல் ஆகியவற்றை சகித்துக் கொண்டதால் இங்கே அடிமை இனம் உருவாகி வருகிறது. இங்கே மக்கள் வாக்குக்குப் பணம் வாங்குவது எப்போது நிற்கிறதோ அப்போது தான் நல்ல சமூகம் உருவாகும். நாங்கள் வாக்கிற்காகத் தெரு தெருவாகச் சென்று பேசி வாக்கு சேகரித்து வருகிறோம். ஆனால், இங்கே வேறு எதாவது கட்சி இப்படி வந்து வாக்கு சேகரிக்கிறார்களா.. அவர்கள் தேர்தலுக்கு 2 நாள் முன்பு வீடு வீடாகச் சென்று கோழி பிடிப்பது போல வாக்குக்காக பணம் தருவார்கள். அந்த நிலை மாறினால் தான் தமிழக மக்கள் நிலை மாறும்.
தமிழ்நாட்டில் நடக்கும் குற்றங்களில் 90 சதவிகிதம் மது போதையில் தான் நடக்கிறது. நாம் தமிழ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மதுக் கடைகளையும் மூடிவிடுவேன். தமிழக இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.. தமிழர்களின் நிலம் பறிபோய் வருகிறது. தமிழகத்தில் மற்ற மாநிலத்தவர் வந்து குடியேறி வருகிறார்கள். அவர்கள் வந்து வேலை செய்வது தவறு எனச் சொல்லவில்லை. ஆனால், இங்கேயே குடும்ப அட்டை வாங்கி நிரந்தரமாகத் தங்குவதை எதிர்க்கிறோம். கோவையை எடுத்துக் கொள்ளுங்கள்.. அங்கே வட மாநிலத்தவர் அளித்த வாக்கு காரணமாகவே பாஜகவின் வானதி சீனிவாசன் பெற்றி பெற்றார். நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் அப்படி தமிழகத்தில் நிரந்தரமாக இருக்கும் வட இந்தியர்களை தமிழகத்தில் இருந்து அனுப்பிவிடுவேன். வட இந்தியர்களுக்கு குடும்ப அட்டை கொடுத்தால் தமிழகம் சீக்கிரமே இந்தி பேசும் மாநிலமாக மாறும் அபாயம் இருக்கிறது.
இங்கே போதை மருந்து கடத்தியதாக ஏ ன் ஜாபர் சாதிக்கை விசாரிக்கிறார்கள். ரொம்பவே நல்ல விஷயம்.. ஆனால், அதானி துறைமுகத்தில் 1. 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பிடிபட்டதே.. அது என்ன ஆனது. அந்த போதைப் பொருள் எங்கே இருக்கிறது. கடலில் கொட்டி விட்டார்களா.. அது தொடர்பாக யாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த கேள்விகளுக்குப் பதில் இல்லை. ஜாபர் சாதிக் சிறுபான்மையினராக இருப்பதால் நடவடிக்கை எடுக்கிறார்கள். மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன். இவ்வாறு அவர் பேசினார்.