இந்தியா உலக அரங்கில் வல்லரசாக மாறுவதற்கும், சூப்பர் பவராக உருவாகுவதற்கும் ஜான் பாண்டியனின் வெற்றி அவசியம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
தென்காசி தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக ஜான் பாண்டியன் நிறுத்தப்பட்டு இருக்கிறார். அவருக்கு எதிராக டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இருவரும் ஒரே சமூகத்தின் தலைவர்களாக இருப்பதால் இருவருக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ரோடு ஷோ நடத்தி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவை உலக வல்லரசு நாடுகள் ஒரு பொருட்டாகவே நினைக்காது. ஆனால், இன்றைக்கு இந்தியாவுடன் நட்பு பாராட்ட அந்த நாடுகள் காத்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு உலக அரங்கில் இந்தியா தலைநிமிர்ந்து நடப்பதற்கு ஒரே ஒரு மனிதர் தான் காரணம். அவர் தான் நமது பிரதமர் நரேந்திர மோடி. காங்கிரஸ் ஆட்சியில் உலக பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 5-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.
இந்தியா இப்படி தொடர்ந்து முன்னேறுவதற்கும், இந்திய மக்களின் வாழ்க்கை மேம்படுவதற்கும் மோடி மீண்டும் பிரதமர் ஆவது அவசியம். கடந்த காலங்களில் இந்தியா மீது அண்டை நாடுகள் அடிக்கடி தாக்குதல் நடத்தும். ஆனால் இன்றோ இந்தியா என்ற பெயரை உச்சரிக்கக் கூட நமது எதிரி நாடுகள் பயப்படுகின்றன. இதற்கு காரணமும் பிரதமர் நரேந்திர மோடி.
பாஜகவின் ஆட்சி சாதாரண மக்களுக்கான ஆட்சி. சாமானிய மனிதனையும் முன்னேற்றும் ஆட்சி. சாமானிய மனிதர்களின் வலிமை தான் ஒட்டுமொத்த இந்தியாவின் வலிலை என்று நம்பும் கட்சி பாஜக. அதனால் தான் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவரான ஜான் பாண்டியனை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப பாஜக விரும்புகிறது. உலக அரங்கில் இந்தியா சூப்பர் பவராக மாறுவதற்கும், வல்லரசாக மாறுவதற்கும் ஜான் பாண்டியனின் வெற்றி அவசியம். நீங்கள் ஜான் பாண்டியனை வெற்றி பெற செய்தால் உங்களுக்கு நன்றி தெரிவிக்க நான் மீண்டும் இங்கு வருவேன். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.