சென்னை தி நகரில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடி, வேட்டி சட்டை அணிந்தபடி, கையில் தாமரை சின்னத்தை ஏந்தியபடி வாக்கு சேகரித்தார். சாலையில் இருபுறமும் பூக்களை வீசி பாஜக தொண்டர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் வருகிற 19 ஆம்தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. இதனால், தேர்தல் களம் அனல் பறக்கிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. இதில், நாம் தமிழர் கட்சியை தவிர பிற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தமிழகம் முழுக்க அரசியல் தலைவர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நாள்தோறும் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். பாஜகவை பொறுத்தவரை பிரதமர் மோடி ஏற்கனவே 6 முறை தமிழகத்தில் பிரசாரம் செய்துவிட்டார்.
இந்த நிலையில் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடி, 7-வது முறையாக இன்று வருகை தந்துள்ளார். மகாராஷ்டிர மநிலத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி, இன்று மாலை 6 மணிக்கு சென்னை வருகை தந்தார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எச். ராஜா ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக தியாகராய நகர் பனகல் பூங்கா பகுதிக்கு மோடி வருகை தந்தார். அங்கிருந்து பிரமாண்ட வாகன பேரணியை தொடங்கினார். பெரும்பாலும், பிரதமர் மோடி தான் எங்கு செல்கிறாரோ அங்கு அந்த பாரம்பரிய உடை அணிவார். அந்த வகையில் இன்று சென்னையில் ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடி தமிழ்நாட்டு பாரம்பரியபடி வேட்டி சட்டை அணிந்திருந்தார்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த வாகன பேரணி தொடங்கியது. வண்ண வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பிரதமர் மோடியின் அருகே அண்ணாமலை மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் இருந்தனர். பிரதமர் மோடியை பாஜக தொண்டர்கள் மலர் தூவி வழிநெடுக உற்சாகத்துடன் வரவேற்றனர். 2 கிலோ மீட்டர் வரையிலான இந்த பேரணியின்போது, பாஜக வேட்பாளர்கள் பால்கனகராஜ் (வடசென்னை), வினோஜ் பி.செல்வம் (மத்திய சென்னை), தமிழிசை சவுந்தரராஜன் (தென்சென்னை) உள்ளிட்டோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். வாகன பேரணியின்போது, சாலையின் இருபுறங்களிலும் பாஜக தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையின் இருபக்கமும் பாஜக தொண்டர்கள் குவிந்து பிரதமர் மோடியை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
பிரதமர் மோடிக்காக இன்று சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல், உயரமான கட்டடங்களில் நின்று போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மொத்தம் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதேபோல் பல இடங்களில் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரோடு ஷோ நிகழ்ச்சியை முடித்த பிறகு பிரதமர் மோடி இரவில் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். அதன்பிறகு நாளை காலையில் ஹெலிகாப்டரில் வேலூர் செல்கிறார். வேலூர் கோட்டை மைதானத்தில் காலை 10.30 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பாஜக கூட்டணி வேட்பாளரான புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகத்துக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்.