தேவரையும், தேவேந்திரரையும் பிரித்து வைத்ததே திராவிடக் கட்சிகள்தான்: ஜான் பாண்டியன்!

தேவரையும், தேவேந்திர குல வேளாரையும் அரசியல் சூழ்ச்சியால் பிரித்து வைத்ததே திராவிடக் கட்சிகள் தான். அதுக்கு முன்னாடி நாம அண்ணன் தம்பிகளாக தான் இருந்தோம். அதேபோல, மீண்டும் நாம் அண்ணன் தம்பிகளாக மாற ராமநாதபுரத்தில் ஓ. பன்னீர்செல்வத்தை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று ஜான் பாண்டியன் கேட்டுக்கொண்டார்.

பாஜக கூட்டணி சார்பில் ராமநாதபுரத்தில் போட்டியிடும் ஓ. பன்னீர்செல்வத்துக்காக தமிழக மக்கள் முன்னேறறக் கழகத் தலைவரும், தென்காசி தொகுதி வேட்பாளருமான ஜான் பாண்டியன் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பல அதிரடியான கேள்விகளை எழுப்பினார். முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஓ. பன்னீர்செல்வத்திற்கு தேவேந்திரர் குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஜான் பாண்டியன் பிரச்சாரம் செய்தது இரு தரப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைந்த ஜான் பாண்டியனை, தென்காசி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக பாஜக நிறுத்தியுள்ளது. அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி களமிறக்கப்பட்டுள்ளார். இருவருமே ஒரே சமூக தலைவர்கள் என்பதால் அவர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இது ஒருபுறம் இருக்க, பாஜக கூட்டணி சார்பில் ராமநாதபுரத்தில் தனிச்சின்னத்தில் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அதிமுகவில் இருந்து விலகிய நிலையில், தனது பலத்தை நிரூபிக்க ஒரே வாய்ப்பாக இந்த தேர்தல் இருப்பதால், இரவு பகலாக பிரச்சாரம் செய்து வருகிறார் ஓபிஎஸ்.

இந்நிலையில், ஓபிஎஸ்க்கு ஆதரவாக அதே கூட்டணியில் உள்ள ஜான் பாண்டியன் ராமநாதபுரத்தில் நேற்று பிரச்சாரம் செய்தார். முக்குலத்தோர் சமூகத்தினரை எதிர்தது அரசியல் செய்து வந்த ஜான் பாண்டியன், தற்போது அதே சமூகத்தை சேர்ந்த ஓபிஎஸ்க்கு ஆதரவாக வாக்கு சேகரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பரப்புரையில் ஜான் பாண்டியன் பேசியதாவது:-

அண்ணன் ஓபிஎஸ் என்ன சின்னத்தில் நிற்கிறார் தெரியுமா? பலாப்பழம் சின்னம். பலாப்பழத்தை பாத்துருக்கீங்களா? நான் தான் பலாப்பழம். வெளியே பாக்கதான் இப்படி இருப்பேன். ஆனால், உள்ளுக்குள்ள அத்தனை இனிப்பா இருப்பேன். ராமநாதபுரத்தில் தேவர்களும், தேவேந்திரர்களும் நிரம்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்றால் ஓபிஎஸ் அண்ணன் இங்கு வெற்றி பெற்றே ஆக வேண்டும். அதனால்தான் ஓபிஎஸ் அண்ணனுக்காக நான் பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறேன்.

அரசியல் சூழ்ச்சியால் தேவர்களும், தேவேந்திரர்களும் இன்றைக்கு எதிரெதிர் துருவங்களாக இருக்கிறோம். நம்மை ஒற்றுமையாக இருக்கவிடாமல் நம்மை பிரித்து வைத்து அரசியல் செய்ததே திமுகவும், அதிமுகவும் தான். இன்னைக்கு அந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக தான் ஓபிஎஸ்ஸும், ஜான் பாண்டியனும் சேர்ந்து வந்திருக்கிறோம்.

ராமநாதபுரம் எம்.பி.யாக இருந்தாரே நவாஸ் கனி, அவரை தான் இப்போதும் திமுக நிறுத்தி இருக்கிறது. அவர் போன முறை எம்.பி.யாக ஜெயித்து ராமநாதபுரத்துக்கு ஏதாவது ஒரு நல்லது பண்ணிருப்பாரா? தேவரையும், தேவேந்திரர்களையும் அவன் வீட்டுக்குள்ளேய விட மாட்டான். நம்ம வீடுகளில் வந்து அவன் சாப்பிடுவானா? சாப்பிட மாட்டான். ஆனால் நம்ம தான் அவனிடம் ஏமாந்துட்டு இருக்கோம். இவ்வாறு ஜான் பாண்டியன் பேசினார்.