காவிரியில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்: செல்வப்பெருந்தகை!

காவிரி விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு செல்வப்பெருந்தகை பதில் அளித்துள்ளார்.

காவிரியில் தண்ணீரை பங்கிடுவது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே தொடர்ச்சியாக பிரச்னை நீடித்து வருகிறது. இதனை தீர்த்து வைக்கவே காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட போதிலும், இன்னும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. கடந்த ஆண்டும் சரி, இந்த ஆண்டும் சரி காவிரியில் தமிழகத்திற்கு முறையாக தண்ணீர் வரவில்லை. அத்துடன், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால், தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகாவால் ஒருபோதும் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என துரைமுருகன் தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பரப்புரையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் அரசு தண்ணீர் திறந்துவிட மறுப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், மேகதாது அணை விவகாரத்தில் திமுக அரசு வாய் பொத்தி மெளனமாக இருக்கிறது என்றும், இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேற்றி விடுவார்கள் என்ற பயம்தான் அதற்கு காரணம் எனவும் குற்றம்சாட்டி இருந்தார். மேலும், நாடாளுமன்றத்தில் 22 நாட்கள் அழுத்தம் கொடுத்த காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வைத்தோம் எனவும் பெருமிதமாக குறிப்பிட்டு வருகிறார்.

இதுதொடர்பாக பதிலளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:-

பாஜக கூட்டணியில் அதிமுக இருந்தபோது, கர்நாடகாவில் இருந்த பாஜக அரசு தண்ணீர் திறப்பு தொடர்பாக மவுனம் சாதித்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி வாய் திறந்தாரா? நாடாளுமன்றத்தில் அழுத்தம் தந்து காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தோம் என்கிறார். ஆனால், அதுகுறித்த உண்மையை சொன்னால் எடப்பாடி பழனிசாமிக்கு தர்ம சங்கடம் ஆகிவிடும்.

பாஜக அரசுக்கு ஊது குழலாக செயல்பட்டு நாடாளுமன்றத்தில் இருந்து அதிமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனரே தவிர, காவிரி பிரச்னைக்காக அல்ல. காவிரி பிரச்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெளிவாக இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் காவிரியில் கர்நாடக அரசால் அணை கட்ட முடியாது.. அதுமட்டுமின்றி ஒன்றுமே செய்ய முடியாது.

அணை கட்டுவோம் என அரசியலுக்காக கூறுகிறார்களே தவிர, அணை கட்ட வாய்ப்பு இல்லை. நீங்கள் கர்நாடகா காங்கிரஸின் நிலைப்பாட்டை கேட்காதீர்கள். தமிழ்நாடு காங்கிரஸின் நிலைப்பாடு என்பது, அணை கட்ட முடியாது என்பதுதான். அணை கட்ட நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.