மீண்டும் பாஜக பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை பிடித்து மோடி பிரதமரானால் இந்திய வரைபடமே மாறிவிடும். மணிப்பூர் போன்ற நிலை தான் இந்தியா முழுவதும் இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் பரபரப்பாக பேசியுள்ளார்.
விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. ஜுன் 1ல் 7 வது கட்ட தேர்தல் நடக்கிறது. அதன்பிறகு ஜுன் 4ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 2014, 2019 தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பிரதமராக மோடி 10 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்ய உள்ளார்.
இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் பாஜக 370 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகளை சேர்த்தால் என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் அதிக இடங்களை வென்று மத்தியில் 3வது முறையாக ஆட்சியை கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. மேலும் பிரதமர் வேட்பாளராக மீண்டும் மோடி முன்னிறுத்தப்பட்டுள்ளார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்பட பாஜக தலைவர்கள் அனைத்து மாநிலங்களிலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே கோகலே இன்ஸ்டிடியூட் ஆஃப் பாலிடிக்ஸ் அண்ட் எகனாமிக்ஸ் கல்லூரியில் நடந்த விழாவில் பரகலா பிரபாகர் பேசியதாவது:-
மீண்டும் மோடி பெரும்பான்மையுடன் பிரதமரானால் நாட்டில் எந்தவொரு தேர்தலையும் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் தேர்தல் எதுவும் இருக்காது. நாட்டில் அரசியலமைப்பு சட்டம் மாற்றப்படும். இந்திய வரைபடமே மாறும். அதனை இந்தியா என்று ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இருக்கும். நாடு முழுவதும் லடாக், மணிப்பூர் போன்ற சூழ்நிலை உருவாகும். மணிப்பூரில் குக்கி-மைத்தேயி மக்கள் இடையேயான மோதல்கள் போன்று நாடு முழுவதும் பதற்றான சூழல் ஏற்படும். பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்பது போன்ற வெறுப்பு பேச்சுக்கள் செங்கோட்டையில் இருந்தே நேரடியாக வரும். தேர்தல் பத்திர ஊழல் என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. வரும் தேர்தல் என்பது வெறும் 2 கூட்டணிகள் இடையேயானது அல்ல. மாறாக இந்த தேர்தல் என்பது பாஜக மற்றும் இந்திய மக்களுக்களின் இடையே நடக்கிறது என்பதை நினைவில் வைத்த கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் பிரதமர் மோடி மற்றும் மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். குறிப்பாக, ‛இந்தியா எனும் கோணல் மரம்” என்ற தலைப்பில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மேலும் தேர்தல் பத்திரம் தொடர்பான விவகாரத்தில் சமீபத்தில் கருத்து தெரிவித்த பகரலா பிரபாகர் நாட்டில் தேர்தல் பத்திரம் என்பது மிகப்பெரிய ஊழல் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.