ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு இந்த பாஜக அரசு ஒரு நாள் நீடித்தால் கூட சட்டம், மக்களாட்சி முறை என நாம் கண்முன் பார்க்கும் இந்த நாடு இப்போது இருப்பது போல் இருக்காது என்று அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் மதுரை லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ஐ.எம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மாற்றுக் கட்சிகளில் இருந்து பாஜகவுடன் சேர்ந்த தலைவர்களின் புகைப்படத்தை காட்டிப் பேசினார் பிடிஆர். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:-
பாஜக ஆட்சிக்கு வந்த போது 25 எதிர்க்கட்சி தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வைத்தனர். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் இவர்களை மிரட்டியது பாஜக. இதையடுத்து இந்த 25 எதிர்க்கட்சி தலைவர்களும் பாஜகவில் இணைந்தனர். அதன் பிறகு இவர்கள் மீது இருந்த ஊழல் குற்றச்சாட்டுகள் பாஜகவின் வாஷிங் மிஷின் மூலம் ஒன்றும் இல்லாமல் காணாமல் போய்விட்டது. இதற்குச் சிறந்த உதாரணம் அஜித் பவார். இவர் மீது 70 ஆயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டை பாஜக முன்வைத்தது. அவரைத் துன்புறுத்தி தங்களது கட்சியில் இணைத்துக் கொண்டது. இந்த ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அஜித் பவாருக்குத்தான் மகாராஷ்டிராவில் துணை முதல்வர் பதவியை பாஜக வழங்கியுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு வெளியான தகவல்கள், மத்திய பாஜக அரசு ஒரு கொடூரமான ஆட்சியை நடத்தியுள்ளது என்பதை தெரிய வைத்துள்ளது. பணமதிப்பழிப்பு என்ற கொடூரமான திட்டத்தை கொண்டு வந்து கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை கெடுத்தனர். ஜிஎஸ்டி திட்டத்தை அவசர கதியில் கொண்டு வந்ததால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது. அதனால் சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
எல்லா நிதியையும் மத்திய அரசே எடுத்துக்கொண்டது. நாம் வரி செலுத்தினால் அதில் ஒரு ரூபாய்க்கு 29 பைசாவைத்தான் திருப்பித் தருகிறார்கள். தமிழ்நாட்டுக்கு நிதியும் தர மாட்டார்கள், புதுப் புது கணக்கெல்லாம் போட்டு நம்மை கடனும் வாங்க விட மாட்டார்கள். உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கியில் இருந்து நமக்கு கடன் வந்தால் அதனையும் நிறுத்தி வைத்திருப்பார்கள். ஜனநாயகத்தை பணநாயகத்தை வைத்து படுகொலை செய்த அரசு பாஜக அரசு. ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு இந்த பாஜக அரசு ஒரு நாள் நீடித்தால் கூட சட்டம், மக்களாட்சி முறை என நாம் கண்முன் பார்க்கும் இந்த நாடு இப்போது இருப்பது போல் இருக்காது. ஏன்.. தமிழ்நாடு என்ற சொல்லே நீடிக்காது. இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். உங்கள் குழந்தைகளுக்காகவும், உங்கள் எதிர்காலத்திற்காகவும் வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.