மதுபானக் கொள்கை வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவி சுனிதாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது.
டெல்லியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட மதுபான கொள்கை விவகாரத்தில் ஊழல் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து டெல்லி துணை நிலை ஆளுநர் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பலரும் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலை வாரம் இரண்டு முறை அவரது குடும்பத்தினர் சந்திக்க அனுமதி தரப்பட்டுள்ளது. இதற்கிடையே கெஜ்ரிவாலை அவரது மனைவி நேரில் சந்திக்கச் சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டதாக ஆம் ஆத்மி பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ஒரு ஜன்னல் வழியாக மட்டுமே கெஜ்ரிவாலை பார்க்க அவரது மனைவிக்கு அனுமதி தரப்பட்டதாகவும் இது மனிதாபிமானமற்றது என ஆம் ஆத்மி தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதே வழக்கில் தான் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு இருந்தார். சுமார் 6 மாதங்கள் அவர் சிறையில் இருந்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் தான் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இதற்கிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் சிங் கூறியதாவது:-
பயங்கரமான குற்றவாளிகள் கூட தங்கள் அரண்மனைகளில் மீட்டிங் நடத்த அனுமதி தரப்படுகிறது. ஆனால், 3 முறை டெல்லி முதல்வராகப் பதவி வகித்த ஒருவர், தன் மனைவியை ஜன்னல் வழியாகச் சந்திக்க வேண்டி இருக்கிறது. ஏன் இப்படி மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்கிறீர்கள். ரூமில் நேரில் சந்தித்துப் பேசக் கோரிக்கை விடுத்த நிலையில், அதை மறுத்துவிட்டார்கள். ஜன்னல் வழியாக மட்டுமே சந்திக்க அனுமதி கொடுத்துள்ளனர். கெஜ்ரிவாலை அவமானப்படுத்தவும் அவரது மன உறுதியை உடைக்கவும் தான் இப்படிச் செய்துள்ளார்கள். மத்திய அரசு மற்றும் பிரதமரின் உத்தரவு காரணமாகவே கெஜ்ரிவாலைச் சிறையில் வைத்து இப்படி சித்ரவதை செய்கிறார்கள்.. அவரது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
கெஜ்ரிவாலைப் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சந்திக்க இருந்தார். ஆனால், அவரது சந்திப்பையும் கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டார்கள். அவர்கள் இருவரும் இதேபோல ஜன்னல் வழியாகத் தான் சந்திக்க வேண்டும் என்கிறார்கள்.
மக்களை ஏமாற்றி சிறைக்குச் சென்ற மறைந்த சஹாரா இந்தியா தலைவர் சுப்ரதா ராய்க்கு திகாரில் இணையம், மொபைல் வசதிகள் எல்லாம் இருந்தது. மோசடி வழக்கில் கைதாகியுள்ள சந்திரா சகோதரர்கள் சிறை வளாகத்தில் மீட்டிங் நடத்துகிறார்கள். முக்கிய கோப்புகளைக் கையெழுத்திடுகிறார்கள். ஆனால், கெஜ்ரிவாலுக்கு மட்டும் எந்தவொரு அனுமதியும் தரப்படுவது இல்லை. கெஜ்ரிவாலை கண்டு உங்களுக்கு என்ன பயம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தான் கைது செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏப்ரல் 15-ம் தேதி விசாரிக்க உள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் விசாரணை: நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 15-ம் தேதியுடன் முடிவடைவதால், அவரது மேல்முறையீட்டு மனு மீதான இந்த விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.