அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவில் மண்டபத்தில் நடந்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ரவி மீண்டும் சனாதனம் குறித்துப் பேசியுள்ள இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
சென்னை அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவில் மண்டபத்தில் சங்கரா விஜயம் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர் என் ரவி கலந்து கொண்டார். இதில் சிறப்பாக பணியாற்றிய கோவில் அர்ச்சகர்களுக்குப் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அதனை ஆளுநர் ஆர் என் ரவி வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர் என் ரவி பேசியதாவது:-
நமது ரிஷிகளும் சித்தர்களும் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பாரதம் ஒரு தேசம் என்ற எண்ணத்தையும் அடையாளத்தையும் விடாமுயற்சியுடன் முழு உலகையும் ஒரு குடும்பமாகக் கருதும் வாழ்க்கை மற்றும் படைப்பு பற்றிய ஒருங்கிணைந்த பார்வையுடன் வளர்த்து வருகின்றனர். இது சனாதன தர்மத்தின் அடிப்படை மற்றும் பாரதத்தின் டிஎன்ஏ ஆகும். ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியார் அமைப்புசார்ந்த முறையில் நாட்டின் பல்வேறு மூலைகளிலும் நான்கு புனித பீடங்களை உருவாக்கினார். இந்த அமைப்புகள் கடினமான காலங்களில் நமது முக்கிய மதிப்புகள் மற்றும் நமது தேசத்தின் அடையாளத்தை மேலும் ஒருங்கிணைத்து நிலைநிறுத்தியுள்ளன. ஆதி சங்கராச்சாரியாரால் நிறுவப்பட்ட சிருங்கேரி பீடம் கடுமையான அந்நிய தாக்குதல்களை எதிர்கொண்டு நமது தேசிய மதிப்புகளைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றியது.
சுமார் 250 ஆண்டுகளாகக் கொடூரமான வெளி தாக்குதல்களுக்கு எதிராக நமது தேசிய மதிப்புகளை வெற்றிகரமாகப் பாதுகாத்த விஜயநகரப் பேரரசை நிறுவியதில் மடத்தின் பங்களிப்பை மறக்க முடியாது. இன்று நம் நாடு விழித்தெழுந்து, சகாப்த மாற்றத்தின் வாசலில் நிற்கும் வேளையில், பாரதத்தை விஸ்வ குருவின் தெய்வீக இலக்குக்கு அழைத்துச் செல்வதில் ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடம் போன்ற அமைப்புகளின் பொறுப்பு மகத்தானது.
இங்குச் சனாதன தர்மம் குறித்து என்னவென்றே தெரியாமல் பேசி வருகிறார்கள். சனாதன தர்மம் ஒரு போதும் எந்தவொரு ஏற்றத்தாழ்வையும் வலியுறுத்தவில்லை. இங்கு இருக்கும் அனைவரும் ஒன்று என்று சொல்வதே சனாதனம்.. பாரதம் என்பது எப்போதும் சனாதனத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. சனாதனம் வீழ்ந்தால் நிச்சயம் பாரதம் வீழும். இவ்வாறு அவர் பேசினார்.