போதை விஷம் தமிழ்நாட்டில் பரவிட்டது! இனி சும்மா இருக்க முடியாது: பிரதமர் மோடி!

”தமிழ் மொழியை நேசிப்பவர்கள் எல்லோரும் பாஜகவை நேசிக்க தொடங்கி உள்ளீர்கள். பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தமிழுக்கு உலக அங்கீகாரம் பெற்றுத் தர வாக்கு உறுதி அளித்து உள்ளோம். தமிழ்நாட்டின் பாரம்பரிய சின்னம் உலக சுற்றுலா வரைபடத்தில் கொண்டு வரப்பட உள்ளது” என்று பிரதமர் மோடி கூறினார்.

பாஜக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக இன்று பிரதமர் மோடி தமிழகம் வந்தார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா அகஸ்தியர்பட்டியில் அமைக்கப்பட்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது அவர் , நெல்லையில் நயினார் நாகேந்திரன், தென்காசியில் ஜான் பாண்டியன், குமரியில் பொன் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் விஜயசீலன், விருதுநகரில் ராதிகா சரத்குமார், விளவங்கோடு சட்டமன்ற இடைத் தேர்தலில் நந்தினி ஆகிய வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி பிரசாரம் செய்தார். பிரதமர் மோடி பேசியதாவது:-

தமிழ் சகோதர சகோதரிகளே.. வணக்கம் நெல்லை.. என தமிழில் பேசி பிரதமர் மோடி பேச தொடங்கினார். மீனவர்களுக்கு முத்து பாசி, என பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பாஜக தேர்தல் அறிக்கையாக நாங்கள் வெளியிட்டுள்ளோம். அதுவும் நம் தமிழ் புத்தாண்டில் நாங்கள் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டோம். பாஜக தேர்தல் அறிக்கை, வளர்ந்த நகரம் தான் வளர்ந்த பாரதமாக மாறும் என்ற கோட்பாட்டில் தயார் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எனக்கு கிடைத்த ஆதரவால் பலர் குழம்பி போய் உள்ளனர். இந்த கூட்டத்தையும், உற்சாகத்தையும் பார்த்து திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு தூக்கம் தொலைந்து போயிருக்கும். நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை பாஜக கொண்டு வந்தது. இப்போது சென்னை – நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்ததாக புல்லட் ரயிலை தென் மாநிலங்களில் இயக்க ஆலோசனை செய்கிறோம். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் புல்லட் ரயில் திட்டத்துக்கான பணிகள் தொடங்கும்.

மோடிக்கு இப்போது ஆதரவு பெருகி வருகிறது. மக்களுக்கான தேவை என்ன என்பதை புரிந்து நான் செய்துகொண்டு வருகிறேன். அதனால் தான் எனக்கு ஆதரவு பெருகி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 1 கோடியே 16 லட்சம் குடிநீர் இணைப்பு கொடுத்துள்ளோம். 12 லட்சம் வீடுகள் கட்டியிருக்கிறோம். 47 லட்சம் பேருக்கு கியாஸ் இணைப்பு கொடுத்துள்ளோம். 57 லட்சம் கழிப்பறைகள் கட்டியிருக்கிறோம். முத்ரா லோன் கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இப்படி எல்லாம் தொண்டு செய்தால் மக்களுக்கு ஏன் என்னை பிடிக்காது.

இந்தியா கூட்டணியில் உள்ள திமுக-காங்கிரஸ் கட்சிகளின் சித்தாந்தம் வெறுப்பினாலும், எதிர்ப்பினாலும் உருவாக்கப்பட்டது. இவர்கள் திராவிடத்தின் பெயரால் தமிழ் பண்பாட்டை அழிக்க நினைக்கிறார்கள். செங்கோலையும், ஜல்லிக்கட்டையும் அவர்கள் எப்படி எதிர்த்தார்கள் என்பதை நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும்.

தென் தமிழ்நாட்டில் எனக்கு நினைவுக்கு வருவது வீரமும், தேசப்பற்றும்தான். மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார் ஆகியோர் தங்கள் வாழ்நாள் முழுவதும் அந்நிய ஆட்சியை எதிர்த்து போராடியவர்கள். நம்முடிய முத்துராமலிங்கத் தேவர் தாக்கத்தால்தான் இந்த பகுதியில் இருந்து ஏராளமான வீரம் மிக்க தமிழர்கள் நேதாஜிக்காக சென்றார்கள். இவர்களுக்கு தனிப்பட்ட ஆசைகள் இல்லை, இந்தியா வலுவான நாடாக வர வேண்டுமென அவர்கள் விரும்பினார்கள். இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு அவர்கள் பாணியிலேயே பதில் அடி கொடுக்கிறோம். இந்தியாவின் மீது பற்று வைத்திருக்கும் ஓவ்வொருவருக்கும் பாஜகதான் விருப்பமான கட்சியாக இருக்கும்.

பாஜக எப்போதுமே தமிழையும், தமிழ் நாட்டையும், தமிழ் மக்களையும் மிகவும் நேசிக்கும் கட்சியாகும். அதனால்தான் தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் பாஜகவுக்கு மாபெரும் உத்வேகம் கிடைக்கிறது.

வ.உ.சி அவர்களை நினைத்து பார்க்கிறேன். கப்பலோட்டி அவர் காட்டிய வழியில்தான் பாதுகாப்புத்துறையில் இந்தியா தன்னிறைவு பெற்று வருகிறது. காமராஜர் என்ற மாபெரும் தலைவர் தேசபக்தியும், நேர்மையும் கொண்ட தலைவர். அவரை பின்பற்றிதான் நேர்மையான அரசியலை பாஜக பின்பற்றி வருகிறது. ஆனால் காங்கிரஸ், திமுக கட்சிகள் அவரை அவமதித்து வருகிறது.

எம்ஜிஆர் என்ற மாபெரும் தலைவரின் கணவுகளை பாஜக முன்னெடுத்து செல்கிறது. எம்ஜிஆரின் பாரம்பரியத்தை திமுக அவமதிப்பு செய்கிறது. செல்வி ஜெயலலிதா அவர்களை சட்டசபையில் திமுக நடத்திய விதத்தை நம்மால் மறக்க முடியாது.

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் நீண்டகால கோரிக்கையை என்.டி.ஏ அரசு நிறைவேற்றி உள்ளது. இந்த நரேந்திரன் உங்களை போன்ற தேவேந்திரர்களிடம் இருந்து வேறுபட மனிதன் அல்ல.

தமிழ்நாட்டின் உயர்நாடியான கச்சத்தீவை திமுக -காங்கிரஸ் கூட்டணி வேறு நாட்டுக்கு கொடுத்தது. திரை மறைவில் செய்த இந்த வரலாற்று பிழையை மன்னிக்க முடியாத குற்றமாக நான் கருதுகிறேன். இது அவர்கள் செய்த தேச துரோகம்.

தமிழ்நாடு போதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. குடும்ப அரசியலில் இருப்பவர்கள் போதை மருந்தை ஊக்குவித்துக் கொண்டு இருக்கிறார்கள். தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தை நினைத்து பெற்றோர்கள் கவலைபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். போதை பொருள் என்ற விஷம் தமிழகம் முழுவதும் பரவிவிட்டது. ஆனால் இதை இந்த நரேந்திர மோடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். போதை இல்லாத இடத்திற்கு பாஜக உங்களை அழைத்து செல்லும். பாஜகவினரின் பிரசாரக் கூட்டத்தை தடுக்கும் செயல்களில் திமுக அரசு ஈடுபடுகிறது. பாஜகவினர் யாரும் பயப்பட வேண்டாம், ஒட்டுமொத்த தமிழகமும் உங்கள் பின்னால் தான் உள்ளது.

இங்க பாருங்க ஒரு சின்ன குழந்தை பாரத மாதா வேடமிட்டு வந்திருக்கிறது. அந்த குழந்தைக்கு கரகோஷம் கொடுங்க. தமிழ் மொழியை நேசிக்கிறவங்களும், தமிழ் பாரம்பரியத்தை கடைப்பிடிப்பவர்களும் இப்போது பாஜகவுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம். உலகம் முழுவதும் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் ஏற்படுத்தப்படும்.

பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் ஆதரவு பாஜகவுக்கே இருக்கிறது. முதல் முறை வாக்காளர்களின் மனது பாஜக பக்கமே உள்ளது. பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவு பெருகி வருகிறது. எதிர்க்கட்சிகள் அசந்து போவது போல, ஆச்சரியப்படுவது போல எங்களுக்கு நீங்கள் ஆதரவு தருகிறீர்கள். 24 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களும், 2047 பற்றியே நான் சிந்திக்கிறேன். இளைஞர்கள் அனைவரும் இந்த முறை எங்களுக்கு வாக்களிக்க வேண்டும். ஒரு முறை பாஜகவுக்கு வாக்களித்து பாருங்கள். உங்களை பற்றியே நாங்கள் யோசித்துக்கொண்டு இருக்கிறோம். பேரலையாக வரும் மக்களை கண்டு தமிழ்நாட்டில் ஆளும் திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. தமிழகத்தில் நான் பரப்புரையை நிறைவு செய்கிறேன். வரும் 19 ஆம் தேதி நீங்கள் போடுகின்ற வாக்குகளை எதிர்நோக்குகிறேன். மீண்டும் மோடி .. மீண்டும் மோடி.. என்று பிரதமர் மோடி கூறினார்.