புதுக்கோட்டை அருகே வேங்கை வயல் கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத நிலையில் அதனை கண்டித்து நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வேங்கை வயல் பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது அந்த கொடூரமான சம்பவம் நடந்து. “இப்ப எல்லாம் யார் சார் சாதி பார்க்கிறார்” என்ற பேச்சுக்களை தவிடு பொடியாக்கும் வகையில் இன்னமும் தமிழகத்தில் சாதி சாக்கடை ஊறிக் கிடக்கிறது என்பதை செவிட்டில் அறைந்தது போல சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றது அந்த சம்பவம். புதுக்கோட்டை மாவட்டத்தை இந்தியா முழுவதும் ஒரே நாளில் கொண்டு சென்ற அந்த சம்பவத்தின் வடுக்கள் இன்னமும் மறையவில்லை என்கின்றனர் அந்த கிராமத்து மக்கள்.
புதுக்கோட்டை அருகே இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் தான் அந்த கொடூர சம்பவம் நடந்தது. 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் நாளன்று அந்தப் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன. சாதிய வன்மம் நிறைந்த இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழக காவல்துறை குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறிய நிலையில் இந்த வழக்கு வெள்ளனூர் போலீசாரிடம் இருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக வெள்ளலூர் காவல்துறையினர் சுமார் 75 பேரை பிடித்து விசாரணை நடத்தினர் மேலும் மத்திய மண்டல ஐஜியாக இருந்த கார்த்திகேயன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து சிபிசிஐடிக்கு விசாரணை மாற்றப்பட்டு வேங்கைவயல் இறையூர் முத்துக்காடு ஆகிய பகுதிகளில் சுமார் 150 நபர்களும் விசாரணை நடைபெற்றது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக அறிக்கையை அளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை ஆணையத்தையும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைத்தது. ஆனாலும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
டிஎன்ஏ சோதனை, குரல் மாதிரி பரிசோதனை வரை சென்று விட்ட நிலையில் தற்போது வரை அதாவது பதினைந்து மாதங்களாகியும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்த அந்த கயவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தமிழக வரலாற்றில் வேங்கை வயலும் அந்த ஊரில் இருக்கும் குடிநீர் தொட்டியும் ஒரு சாதிய வன்கொடுமை வடுவாகவே மாறிப்போனது.
இந்த நிலையில் இந்த மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 15 மாதங்கள் ஆகியும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை இதனால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே நாங்கள் தேர்தலை புறக்கணிக்கிறோம் என அந்த ஊரில் பதாகை வைக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட வாக்கு கேட்டுச் சென்ற அரசியல் கட்சியினரை அப்பகுதி மக்கள் சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.