மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்துக்கு அது ஆபத்தாக அமைந்து விடும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்துக்கு அது ஆபத்தாக அமைந்து விடும். மக்களவைத் தொகுதிகளை குறைத்து விடுவார்கள். தற்போது 39 மக்களவை தொகுதிகளைக் கொண்ட தமிழகத்தில் அடுத்த தேர்தலுக்குள் 31 மக்களவை தொகுதிகள் மட்டுமே இருக்கும். மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கை, மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய தமிழகத்துக்கும் பிற மாநிலங்களுக்குமான தண்டனையாகப் பார்க்க வேண்டும். மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பாஜக அரசு செல்லாக் காசாக்கி விடும்! இது ஜனநாயகத்துக்கு ஆபத்து!
தமிழகத்தில் உள்ள மக்களவை தொகுதிகளை குறைக்கப் போவதில்லை என பிரதமர் மோடி மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். ஆகவே, தமிழகத்தை அழிக்க நினைக்கும் பாஜகவையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம்! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.