பாஜக மூத்த தலைவர்கள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தும் ஹெலிகாப்டர்களை மத்திய புலனாய்வு அமைப்புகளின் அதிகாரிகள் சோதனை செய்வார்களா? என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார்.
மக்களவைத் தேர்தலையொட்டி, மேற்கு வங்க மாநிலம் கூச்பெஹரில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி பேசியதாவது:-
திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துகிறது. அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சமமான போட்டி வாய்ப்பை வழங்க மத்தியஅரசு மறுக்கிறது. குறிப்பாக, எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி தேர்தல் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தும் ஹெலிகாப்டரில் பணம், தங்கம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததாகக் கூறி வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால், சோதனையில் ஒன்றும் கிடைக்கவில்லை.
இதுபோன்ற செயலில் எங்கள் கட்சியினர் ஈடுபடமாட்டார்கள். பாஜகவினர்தான் அதுபோன்ற செயலில் ஈடுபடுவார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களின் வாகனங்களை சோதனையிடுவது போல, பாஜக மூத்த தலைவர்கள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தும் ஹெலிகாப்டர்களை மத்திய புலனாய்வு அமைப்புகளின் அதிகாரிகள் சோதனை செய்வார்களா? இவ்வாறு அவர் தெரிவித்தார்.