ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் திமுகவுக்கு தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்: ராமதாஸ்!

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் திமுகவுக்கு தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மத்தியில் மோடிதான் மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதில் தமிழக மக்கள் அனைவரும் ஒரே கருத்தில் உள்ளனர்.அதேநேரத்தில் தமிழகத்தை ஆளும் கட்சிக்கு இத்தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். அதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் உள்ளது.

தமிழகத்தில் திமுக ஒவ்வொருமுறை ஆட்சிக்கு வருவதற்கும் ஏணியாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்தான். ஆட்சிக்கு வந்தபின் திமுக அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் தாங்கிப் பிடிப்பவர்களும் அவர்கள்தான். ஆனால், அவர்களே திமுக அரசை இப்போது சபிக்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் அந்தக் கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை.

எனவே, தங்களை ஏமாற்றியவர்களுக்கு பாடம் புகட்ட அவர்கள் தயாராகி விட்டனர். 2021-ம் ஆண்டு தேர்தலில் 500-க்கும் கூடுதலான வாக்குறுதிகளை அளித்து மக்களை மயக்கி ஆட்சிக்கு வந்த திமுக, அவற்றில் 50 வாக்குறுதிகளைக்கூட இதுவரை நிறைவேற்றவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.