கேரளாவில் மாதிரி ஓட்டுப்பதிவின்போது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 2 ஓட்டுகள் விழுவது தொடர்பான புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேட்டை தடுக்க 3 முக்கிய கோரிக்கைகளை காங்கிரஸ் வைத்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை ஒரே கட்டமாக 40 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதேபோல் கேரளாவில் உள்ள 20 லோக்சபா தொகுதிகளுக்கு வரும் 26ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் கேரளாவில் தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாதிரி ஓட்டுப்பதிவும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் காசர்கோடு பகதியில் நடத்தப்பட்ட மாதிரி வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஒருமுறை பட்டனை அழுத்தினால், பாஜகவுக்கு 2 வாக்குகள் விழுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். அதேபோல் மொத்தம் 4 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இதுபோல் இரட்டை வாக்குகள் பதிவானது கண்டுபிடிக்கப்பட்டது.
ஏற்கனவே மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மீது எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்து தான் பாஜக வெல்கிறது என தொடர்ந்து கூறி வருகின்றன. மேலும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும் விவிபேட் இயந்திரங்களின் ஸ்லீப்பை 100 சதவீதம் எண்ண வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து கேரளாவில் ஒரு பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவது தொடர்பாக விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தான் மீண்டும் காங்கிரஸ் கட்சி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மீது சந்தேகத்தை கிளப்பி உள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு தான் ஓட்டு விழுவது கேரளாவில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால் தான் ‛‛ராஜாவின் ஆன்மா மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் தான் உள்ளது” என நாங்கள் கூறுகிறோம். இதனால் தான் நாங்கள் 3 முக்கிய கோரிக்கைகளை வைக்கிறோம். இதில் முதல் கோரிக்கை என்பது விவிபேட் ஸ்லிப்புகளை கண்டிப்பாக மக்களின் கைகளில் வழங்க வேண்டும். இரண்டாது கோரிக்கை என்பது வாக்காளர்கள் தங்களின் விவிபேட் ஸ்லிப்புகளை தனி பாக்ஸில் செலுத்த வேண்டும். மூன்றாவது கோரிக்கை என்பது தனி பாக்ஸில் செலுத்தப்படும் அனைத்து விவிபேட் ஸ்லிப்புகளையும் 100 சதவீதம் எண்ண வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் பலமுறை வாய்ப்பு கேட்டோம். ஆனால் தேர்தல் ஆணையம் எங்களிடம் பேச தயாராக இல்லை” என காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.