எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.பி தயாநிதி மாறன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பிரச்சாரத்தின்போது மத்திய சென்னை தொகுதி எம்.பியும், மத்திய சென்னை திமுக வேட்பாளருமான தயாநிதி மாறன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி இருந்தார். தயாநிதி மாறன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என விமர்சித்து இருந்தார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானது என்றும், எடப்பாடி பழனிசாமி தனது தவறான பேச்சை திரும்பப் பெறுவதோடு, பொதுவெளியில் மக்களிடத்தில் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் திமுக மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது திமுக எம்.பியும் மத்திய சென்னை தொகுதி வேட்பாளருமான தயாநிதி மாறன் வழக்குத் தொடர்ந்துள்ளார். தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு எதிராக அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் தயாநிதி மாறன்.
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன் கூறியதாவது:-
என் தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என்று ஒரு அவதூறை பொய் என்று தெரிந்தே பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. எனக்கு எதிராக அவதூறு ஏற்படுத்த வேண்டும் என்றே பேசியுள்ளார்.
அது தொடர்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால், அவர் மன்னிப்பு கேட்கவில்லை. அதனால், தான் தற்போது அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளேன். அடுத்த மாதம் 14ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. அவதூறு பேசிவிட்டு பகிரங்க மன்னிப்பு கேட்க முன்வராத எடப்பாடி பழனிசாமியின் பொய் முகத்திரையை நீதிமன்றம் நிச்சயம் கிழித்தெறியும்.
இதுவரை 95 சதவீதத்துக்கு மேல் எனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தியுள்ளேன். என் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.17 கோடி ஒதுக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவிய சமயத்தில் தொகுதி மேம்பாட்டு நிதி தடுத்து வைக்கப்பட்டது. எனினும், எனக்கு ஒதுக்கப்பட்ட ரூ.17 கோடியில் மீதமிருப்பது ரூ.17 லட்சம் தான்.
எடப்பாடி பழனிசாமி, இந்த தேர்தலில் தோல்வி அடையப்போகிறோம் என்ற விரக்தியில் பேசியுள்ளார். சுய நினைவுடன் தான் அவர் பேசுகிறாரா என்று தெரியவில்லை. திமுகவை தாக்கி பேச வேண்டும் என்பதற்காகவே பேசிவிட்டு சென்றுள்ளார். ஆனால் உண்மை என்னவென்பது மக்களுக்கு தெரியவேண்டும்.
என்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு சிறப்பான முறையில் பணியாற்றியுள்ளேன். எனது பணியை கொச்சைப்படுத்தி, எனக்கு அவதூறு ஏற்படுத்த வேண்டும் வகையிலேயே எடப்பாடி பழனிசாமி இப்படி பேசியுள்ளார். இவ்வாறு தயாநிதி மாறன் கூறினார்.