400 தொகுதிகளில் வெற்றி பெற விரும்புவதன் மூலம் அனைத்து இடஒதுக்கீடுகளையும் ரத்து செய்வதுதான் பிரதமர் மோடியின் நோக்கம் என்று பிரியங்கா கூறினார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடந்த வாகன பேரணியில் கலந்து கொண்டார். காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
ஒரு மணி நேரத்துக்கு மேலாக வாகன பேரணி நடந்தது. வாகன பேரணியில் பிரியங்கா பேசியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பிரதமர் மோடி பேசி வருகிறார். அம்பேத்கரின் அரசியல் சட்டத்தை மாற்றுவதும், அனைத்து வகையான இடஒதுக்கீடுகளையும் ரத்து செய்வதும்தான் அவரது நோக்கம். அரசியல் சட்டம் இல்லாவிட்டால், ஜனநாயகம் இருக்காது. ஜனநாயகம் உயிருடன் இல்லாவிட்டால், உங்கள் உரிமைகளை பாதுகாக்க முடியாது. ஜனநாயகத்தை பாதுகாக்க நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை அமோக வெற்றி பெறச் செய்வதுதான். ஆர்வமாக வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
வாகன பேரணிக்கிடையே பிரியங்கா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “பொது பிரச்சினைகள் அடிப்படையில்தான் தேர்தல் அமைய வேண்டும். ஆனால், பிரதமர் மோடியோ வேலையின்மை, பணவீக்கம் மற்றும் விவசாயிகள், பெண்கள் பிரச்சினைகள் குறித்து பேசுவது இல்லை.
அதற்கு பதிலாக அவரும், இதர தலைவர்களும் வேறு விஷயங்களை பேசுகிறார்கள். அரசியல் சட்டத்தை மாற்றுவது பற்றி அவர்கள் ஏன் பேசுகிறார்கள்? அரசியல் சட்டம் மாற்றப்பட்டால், இடஒதுக்கீடும், ஓட்டுரிமையும் என்ன ஆகும்? தேர்தல் பத்திர ஊழலை சுப்ரீம் கோர்ட்டு அம்பலப்படுத்தி உள்ளது. ரூ.180 கோடி வருமானம் ஈட்டிய ஒரு நிறுவனம், பா.ஜனதாவுக்கு ரூ.1,100 கோடி நன்கொடை கொடுத்துள்ளது” என்று அவர் கூறினார்.