அரசியலமைப்பு என்பது பாஜகவுக்கு வெற்று காகிதம்தான்: பிரியங்கா காந்தி!

“மோடியைச் சார்ந்தவர்களுக்கு அரசியலமைப்பு என்பது எதற்கும் மதிப்பில்லாத வெற்று காகிதத் துண்டுதான். மக்களின் விருப்பத்துக்கு எதிராகச் பல சட்டங்களை இயற்றியுள்ளது ஆளும் பாஜக அரசு” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

கேரளாவில் நடந்த பிரச்சாரப் பேரணியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது:-

ஆளும் பாஜக அரசு, மக்களின் விருப்பத்துக்கு எதிராகச் பல சட்டங்களை இயற்றியுள்ளது. லட்சக்கணக்கான விவசாயிகள் பல மாதங்களாக போராட்டம் நடத்தினர். அவர்களில் சிலர் இறந்து கூட போனார்கள். அவர்களில் சிலர் பயங்கரவாதிகள், தேச விரோதிகள் என்று அழைக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

நமது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் உரிமைகளை நிலைநாட்டும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை, அவர்கள் எதற்கும் மதிப்பில்லாத வெற்று காகிதமாக பார்க்கிறார்கள். அரசின் பொதுத் துறை சொத்துகளான விமான நிலையங்கள், துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், பரந்த விரிந்த பொது நிலங்கள், சிமென்ட், மின்சாரம் மற்றும் நிலக்கரி போன்றவை பிரதமருக்கு நெருக்கமான ஒரு சில தொழிலதிபர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

அதாவது, பொதுச் சொத்துகள் அனைத்தும் பிரதமரின் கோடீஸ்வர நண்பர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. அவர்களின் 16 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இதனால் விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வேலையின்மை விகிதம் உயர்ந்துள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொரோனா காலத்தில் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக அணிவகுத்துச் செல்லப்படுகிறார்கள். ஆனால், அரசு செயல்பட மறுக்கிறது. பாலியல் வன்கொடுமையாளர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். தங்கள் கருத்தை வெளிப்படுத்தியதற்காக பத்திரிகையாளர்கள் பதவி நீக்கம் செய்யப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அரசுக்கு எதிராகப் பேசத் துணிந்தவர்களை அரசாங்கம் துன்புறுத்துகிறது, குற்றம் சாட்டுகிறது. போராட்டம் நடத்துபவர்களை குண்டர்களைப் போல சிறையில் அடைக்கிறது. நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். சட்டத்தை பாதுகாக்க வேண்டிய அரசு நிறுவனங்களோ சட்டத்துக்கு புறம்பாக செயல்பட தூண்டப்பட்டன. இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.