தோல்வி உறுதி என்றதுமே “ஒப்பாரி” பாட ஆரம்பிச்சிட்டாங்க: கி.வீரமணி!

தோல்வி உறுதி என்றவுடன் புதுப்புது வாதங்களைக் கூறி, பாஜகவினர் ‘ஒப்பாரி’ வைத்துப் பேட்டி தந்து கொண்டிருக்கிறார்கள் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக 69.46% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்நிலையில், பாஜக கோவை வேட்பாளர் அண்ணாமலை, தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம் ஆகியோர், தங்கள் தொகுதிகளில் 1 லட்சம் வாக்காளர்களை நீக்கி விட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். தேர்தல் முடிவு தெரிந்துவிட்டதால் பாஜக வேட்பாளர்கள் இவ்வாறு பேசத் தொடங்கி இருப்பதாக கி.வீரமணி விமர்சித்துள்ளார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நாட்டின் 18 ஆவது பொதுத் தேர்தல் நேற்று தமிழ்நாடு முழுவதிலும் நடந்தது – பல மாநிலங்களிலும் முதல் கட்டமாக இந்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுள்ளது. நேற்றைய வாக்குப் பதிவின்போது எந்த இடத்திலும் கலவரமோ அல்லது வாக்குச் சாவடிகளில் சண்டைகளோ நடைபெறாமல், பல கட்சித் தேர்தல் முகவர்கள் முன்னிலையில் தேர்தல் சுமூகமாகத்தான் நடந்து முடிந்துள்ளது. மாலை 6 மணிக்குள் வாக்குப் போட வந்தவர்களுக்கு பல வாக்குச்சாவடிகளில் ‘டோக்கன்’ கொடுத்து வரிசையில் அவர்களை நிற்க வைத்து அனைவரும் வாக்குப் போட்ட பிறகே, வாக்குப் பெட்டிக்குச் ‘சீல்’ வைக்கப்பட்ட செய்திகளும் வந்துள்ளன!

வாய்ப்பறை கொட்டிய கோவை பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை, தென்சென்னை பா.ஜ.க வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை பா.ஜ.க வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் போன்றவர்கள் தங்களுக்குத் தோல்வி உறுதி என்றவுடன், இன்று காலை புதுப்புது வாதங்களைக் கூறி, ‘ஒப்பாரி’ வைத்துப் பேட்டி தந்ததைப் பார்த்தபோது, எப்படி சிரிப்பது என்றே தெரியவில்லை! தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கீழ்தானே இயங்குகிறது! ”வெள்ளிக்கிழமை தேர்தல் வைக்காமல், புதன்கிழமை வைத்திருக்க” வேண்டுமாம்; விடுமுறையில் மக்கள் ஊருக்குப் போய்விட்டார்களாம். அது யாருடைய பொறுப்பு? நிறையப் பேருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டுள்ளனவாம்! பா.ஜ.க என்ன செய்துகொண்டிருந்தது?

”தி.மு.க.வினர் வாக்குச் சாவடிக்குள் புகுந்து பா.ஜ.க முகவரை வெளியேற்றினார்கள்” என்கிறார் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன். அப்படி ஒரு புரளியை திடீரென்று இன்று காலை வந்து சொல்கிறார்களே, நேற்று ஏன் இதுகுறித்துப் பேசவில்லை? ஊடகங்கள் எங்கே போயினவாம்? சொல்லப்போனால், வாக்குச்சாவடியில் பிரச்சினை செய்ததாக கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் உதவியாளர் உள்பட ஆதரவாளர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை!

”நூறு சதவிகித வாக்குப் பதிவுக்குப் பல கோடி ரூபாய் விளம்பரம் செய்தும் பயனில்லை” – பலன் இல்லையாம் (தமிழிசை). குற்றம் சுமத்தி, தோல்விக்கு இப்போதே அச்சார சமாதானங்கள் சொல்லக் கிளம்பியுள்ள காவிகளே, உங்களுக்கு ஒரே கேள்வி! தேர்தல் ஆணையம் யாருடைய அதிகாரத்தின்கீழ்? மத்திய அரசின் கீழா? அல்லது மாநில அரசின் கீழ் இயங்குகிறதா? இந்தியாவில் மூன்று தேர்தல் ஆணையர்களையும் நியமித்தது யார்? முன்பே நீங்கள், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்களிடம் இதுபற்றி பகிரங்கமாகப் பேசினீர்களா? அந்தோ பரிதாபம், இதற்கேது மக்கள் அனுதாபம்! அறிஞர் அண்ணாவின் எழுத்தோவியத் தலைப்புதான் நினைவிற்கு வருகிறது.”ஆரம்பத்தில் ‘அடானா’ (மகிழ்ச்சி ராகம்), முடிவில் ‘முகாரி’ (துன்பப் பாட்டு).” தோல்விக்கு முன்னுரை பாடுவதாகவே விவரம் அறிந்தவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அந்தோ பரிதாபம்! இதற்கேது மக்கள் அனுதாபம்?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.