திமுக தோல்வி பயத்தில் பெயர் பட்டியலிலிருந்து வாக்காளரின் பெயர்களை நீக்கியுள்ளது என நீலகிரி மாவட்டத்தில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் குற்றம்சாட்டியிருக்கிறார்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. திமுக, பாஜக, அதிமுக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவியதால் தேர்தல் மீதான எதிர்பார்ப்பு தீவிரமடைந்தது. தமிழகத்தின் நட்சத்திர தொகுதியாக நீலகிரி தொகுதி இருக்கிறது. இங்கு திமுக சார்பில் சிட்டிங் எம்பி ஆ.ராசாவும், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான எல்.முருகன் போட்டியிட்டனர். அதிமுகவும், நாதகவும் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தாலும், களம் திமுக – பாஜக என்றே பிரதிபலித்தது. மற்ற தொகுதிகளை போலவே இந்த தொகுதியிலும் நேற்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எல்.முருகன், “திமுக தோல்வி பயத்தில் பெயர் பட்டியலிலிருந்து வாக்காளர்களின் பெயர்களை நீக்கியுள்ளது” என்று குற்றம்சாட்டியுள்ளார். அதாவது, “தமிழ்நாட்டை ஆளும் கட்சி தோல்வி பயத்தில் பலரது பெயர்களை நீக்கி உள்ளது. தேர்தல் நடத்துபவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி இருக்கிறார்களா இல்லையா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்வார்கள். பல இடங்களில் பிரச்சனை நடந்துள்ளது. குறிப்பாக அவிநாசி தொகுதியில் உள்ள அன்னூரில் ஒரு வயதான மூதாட்டி வாக்கு செலுத்த சென்ற இடத்தில் அவருக்கு உதவி செய்த அலுவலரிடம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மூன்றாவது பட்டனை அழுத்த சொன்னபோது அவர் ஒன்றாவது பட்டனை அழுத்திருக்கிறார். அதை நாம் புகார் தெரிவித்து விசாரித்து வருகிறோம், குறிப்பாக தற்போது நடந்த லோக்சபா தேர்தலில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பது அவர்களுடைய விருப்பம். ஆனால், வாக்காளர்களின் உரிமையே மறுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.