தமிழகத்தில் வாக்குப்பதிவு இறுதி நிலவரம் அறிவிப்பு: 69.46% வாக்குகள் பதிவு!

தமிழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், இறுதியாக 69.46 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் இன்று இரவு 7 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது, 72.47% வாக்குகள் பதிவான கடந்த 2019 மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது 3.01 சதவீத குறைவு ஆகும்.

தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் மக்களவைத் தேர்தல் நேற்று வெள்ளிக்கிழமை அமைதியாக நடந்து முடிந்தது. இரவு 7 மணி நிலவரப்படி, 72.09 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்பின், நள்ளிரவு 12 மணிக்கு வெளியான தகவலில், தமிழகத்தில் பதிவான மொத்த வாக்கு சதவீதம் 69.46 என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், 7 மணி நிலவரப்படி தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 70.93% வாக்குகள் பதிவாகியிருந்ததாக கூறப்பட்டிருந்தது. ஆனால், நள்ளிரவில் வெளியிடப்பட்ட பட்டியலில், அந்த தொகுதியில் 59.96% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ஸ்ரீபெரும்புதூர், சிவகங்கை, கோவை உள்ளிட்ட பல தொகுதிகளில் 7 மணி நிலவரத்துக்கும் 12 மணி நிலவரத்துக்கும் இடையே வித்தியாசம் காணப்பட்டது.

பொதுவாக வாக்குப்பதிவு முடிந்து அறிவிக்கப்படும் வாக்கு சதவீத அளவுக்கும், இறுதியில் அறிவிக்கப்படும் வாக்கு சதவீத அளவுக்கும் இடையே சற்று ஏற்ற இறக்கம் இருக்கலாம். ஆனால், மத்திய சென்னையில் இரவு 7 மணிக்கு 67.35% வாக்குகள் பதிவாகியிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 12 மணி நிலவரப்படி அந்த சதவீதம் 53.91% என்று அறிவிக்கப்பட்டது. இது, பொதுமக்கள் இடையே குழப்பத்தையும், தெளிவின்மையையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்று சனிக்கிழமை வெளியான இறுதி வாக்குப்பதிவு நிலவரத்திலும் 69.46 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இறுதி நிலவரப்படி தொகுதி வாரியான வாக்குப்பதிவு விபரம்:

* திருவள்ளூர் – 68.31%
* வட சென்னை – 60.13%
* தென் சென்னை – 54.27%
* மத்திய சென்னை – 53.91%
* ஸ்ரீபெரும்புதூர் – 60.21%
* காஞ்சிபுரம் – 71.55%
* அரக்கோணம் – 74.08%
* வேலூர் – 73.42%
* கிருஷ்ணகிரி – 71.31%
* தருமபுரி – 81.48%

* திருவண்ணாமலை – 73.88%
* ஆரணி – 75.65%
* விழுப்புரம்- 76.47%
* கள்ளக்குறிச்சி – 79.25%
* சேலம்- 78.13%
* நாமக்கல் – 78.16%
* ஈரோடு – 70.54%
* திருப்பூர் – 70.58%
* நீலகிரி – 70.93%
* கோவை – 64.81%

* பொள்ளாச்சி -70.70%
* திண்டுக்கல் – 70.99%
* கரூர்- 78.61%
* திருச்சி -67.45%
* பெரம்பலூர் – 77.37%
* கடலூர் – 72.28%
* சிதம்பரம் – 75.32%
* மயிலாடுதுறை – 70.06%
* நாகப்பட்டினம் – 71.55%
* தஞ்சாவூர்- 68.18%

* சிவகங்கை – 63.94%
* மதுரை – 61.92%
* தேனி – 69.87%
* விருதுநகர் -70.17%
* ராமநாதபுரம் -68.18%
* தூத்துக்குடி – 59.96%
* தென்காசி – 67.55%
* திருநெல்வேலி – 64.10%
* கன்னியாகுமரி – 65.46%