கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு எதிரொலி: சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு!

கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு பரவுவதையடுத்து, தமிழக -கேரள எல்லையான வாளையார் உள்ளிட்ட 12 சோதனைச்சாவடிகளில் கால்நடைப் பராமரிப்புத்துறை சார்பில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள பண்ணைகளில் வாத்து, கோழி உள்ளிட்ட பறவைகள் தொற்று நோய் பாதிப்புக்கு உள்ளாகி இறப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, `ஹெச்5என்1′ எனப்படும் பறவைக்காய்ச்சல் தமிழகத்திலும் பரவக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து, கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதால், கோவை மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லைப் பகுதிகளான ஆனைகட்டி, வாளையார், வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்பகவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், வடக்காடு உள்பட 12 சோதனைச் சாவடிகளில், சிறப்பு கால்நடைப் பராமரிப்புக் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக கோவை மண்டல கால்நடைப் பராமரிப்பு த்துறை இணை இயக்குனர் பெருமாள் சாமி கூறியதாவது:-

கேரள மாநிலம் ஆலப்புழாவில் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழக-கேரள எல்லையான வாளையார் உள்ளிட்ட 12 சோதனைச்சாவடிகளில் சிறப்பு கால்நடைப் பராமரிப்புக் குழுவினர் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் குழுவில் கால்நடை மருத்துவர், கால்நடை ஆய்வாளர், 2 கால்நடைப் பராமரிப்புஉதவியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்துக்கு வரும் வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 1,252 கோழிப்பண்ணைகள் உள்ளன. பறவைக் காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக இந்தப் பண்ணைகளைக் கண்காணித்து வருகிறோம். மேலும், நீர்நிலைகளில் உள்ள பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, கோழிப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய 432 மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஆய்வு நடத்தப்பட்டது. இதில், பறவைக்காய்ச்சல் அறிகுறி தென்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.