என்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்க வெளிநாட்டு சதி: மோடி!

தம்மை பிரதமர் பதவியில் இருந்து அகற்றுவதற்கு வெளிநாட்டு சக்திகளுடன் சேர்ந்து சிலர் சதி செய்வதாக பிரதமர் மோடி பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் லோக்சபா தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. பெங்களூர் மத்தி உட்பட 14 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் இறுதிகட்ட பிரசாரம் அனல் பறக்கிறது. கர்நாடகாவில் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி 4 முறை பிரசாரம் செய்ய வருகை தந்தார். கர்நாடகாவுக்கு நேற்று 4-வது முறையாக வருகை தந்த மோடி, சிக்பள்ளாபூர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார். சிக்பள்ளாபூர் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

10 ஆண்டுகால பாஜக ஆட்சியால் 25 கோடி பேரை வறுமை நிலைமையில் இருந்து மீட்டுள்ளோம். 10 ஆண்டுகளில் 4 கோடி மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளோம். 5 ஆண்டுகளில் மேலும் 3 கோடி பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுப்போம். தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை ஜனாதிபதியாக்கியதும் பாஜகதான். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை ஜனாதிபதியாக்கியதும் பாஜகதான். முத்ரா திட்ட கடன் உதவி ரூ20 லட்சமாக உயர்த்தப்படும்.

என்னை பிரதமர் பதவியில் இருந்து கீழே இறக்க சிலர் சதி செய்திருக்கிறார்கள். அதுவும் வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து எனக்கு எதிராக சதி செய்திருக்கின்றனர். என்னை அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

சிக்பள்ளாபூர் பொதுக் கூட்டத்துக்குப் பின்னர் பெங்களூர் பிரசாரக் கூட்டத்தில் மோடி பங்கேற்று பேசினார். கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஏப்ரல் 26-ந் தேதி மற்றும் மே 7-ந் தேதி என கர்நாடகாவில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. கர்நாடகா லோக்சபா தேர்தல் கருத்து கணிப்புகளைப் பொறுத்தவரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என தெரிவித்துள்ளன. கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி மிக அதிகபட்சமாக 10 தொகுதிகளைக் கைப்பற்றக் கூடும் என்கிறது இந்த கருத்து கணிப்புகள்.