உயிருக்கே உலை வைக்கும் ஸ்மோக் பிஸ்கெட்டை உடனடியாக தடை செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு இயக்குநர் மோகன் ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இது போன்று விற்கும் ஸ்மோக் பிஸ்கெட் என்ற திண்பண்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். குழந்தைகள் புகையை பார்த்து ஆசையாக சாப்பிட அடம் பிடிப்பார்கள். அதில் ஊற்றப்படுவது லிக்விட் நைட்ரஜன், ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட உயிருக்கு ஆபத்து. தமிழக அரசு இதற்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை முதல்வர் ஸ்டாலினுக்கும் டேக் செய்துள்ளார். அந்த வீடியோவில் திரவ நைட்ரஜனை பிஸ்கட்டில் வைக்கிறார்கள். அதிலிருந்து புகை வருகிறது. அந்த புகையுடன் அப்படியே பிஸ்கெட்டை எடுத்து வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். அதை சாப்பிட்டதும் நம் வாய், மூக்கில் இருந்து புகை வரும். ஒரு சிறுவன் ஆசையாக திரவ நைட்ரஜனை உண்கிறார். சிறிது நேரத்தில் வயிறு வலியால் துடிக்கிறார். இதற்காகத்தான் அந்த பிஸ்கெட்டை தடை செய்ய வேண்டும் என்கிறார்கள்.
ஆனால் இந்த வீடியோ தமிழகத்தில் எடுக்கப்பட்டது இல்லை என பலர் கூறி வருகிறார்கள். இது கர்நாடகா மாநிலத்தில் தாவணகெரேவில் நடந்த விழாவில் எடுக்கப்பட்ட வீடியோ என்கிறார்கள். அதாவது அந்த உண்மைதானா என நெட்சடிகள் கேள்வி எழுப்ப அதற்கு ஆம் உண்மைதான்! சென்னை தீவு திடலில் இந்த வருடம் நடந்த அரசு பொருட்காட்சியில் இரண்டு கடைகள் இதற்காக ஒதுக்கப்பட்டன.. பல கடற்கரைகளில் விற்பனை செய்கிறார்கள்.. திருமண விழாக்களில் தருகிறார்கள்.. உண்மையே என மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
இந்த ஸ்மோக் பிஸ்கெட்டுகள் பொதுவாக அரசு, தன்னார்வலர்கள் நடத்தும் பொருட்காட்சிகளில் பெரிய அப்பளம், மிளகாய் பஜ்ஜி உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதை மக்கள் விரும்பி வாங்கிச் சாப்பிடுவார்கள். அந்த வகையில்தான் ஸ்மோக் பிஸ்கெட் விற்பனையும் உள்ளது. அதாவது ஒரு சிலிண்டரில் இருந்து திரவ நைட்ரஜனை எடுக்கிறார்கள். அதை பிஸ்கெட்டில் சேர்க்கிறார்கள். பிஸ்கெட்டில் இருந்து புகை வருகிறது. அந்த புகையுடன் பிஸ்கெட்டை அப்படியே வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். அப்போது நமக்கும் புகை வரும். இது ஜாலிக்காக பலர் வாங்கி சாப்பிடுகிறார்கள். இதுதான் ஆபத்தை விளைவிக்கும் என்கிறார் மோகன் ஜி.
மேலும் இதை சாப்பிடுவதால் சிறுவர், சிறுவர்களுக்கு புகைப்பிடிக்கும் ஆசையும் வந்துவிடும் என பலர் எச்சரிக்கிறார்கள். பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, பகாசுரன் உள்ளிட்ட படங்களை எடுத்துள்ளார் மோகன் ஜி. இவர் தயாரித்த திரௌபதி திரைப்படம் சமூகவலைதளத்தில் பேசுபொருளாக இருந்தது. புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் பஞ்சு மிட்டாயின் நிறமியில் இருப்பதால் வண்ண வண்ண பஞ்சு மிட்டாய்களுக்கு தமிழகம், புதுவையில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.