திகார் சிறையில் தனது கணவரைக் கொல்ல சதி நடப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், தனது கணவர் உண்ணும் ஒவ்வொரு உணவும் அதிகாரிகளால் கண்காணிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
டெல்லி முதல்வரான கெஜ்ரிவால் மதுபான கொள்கை விவகாரத்தில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். சிறையில் இருக்கும் போதிலும் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. தொடர்ந்து டெல்லி முதல்வராக இருந்து சிறையில் இருந்து உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இதற்கிடையே ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள பல முக்கிய தலைவர்கள் அதில் கலந்து கொண்டனர். ஆம் ஆத்மியில் இருந்து கெஜ்ரிவால் மனைவி சுனிதா இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பேசிய சுனிதா தனது கணவரைக் கொல்ல சிறையில் சதி நடப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். சுனிதா கெஜ்ரிவால் கூறியதாவது:-
அவர் சாப்பிடும் போது கூட கேமராக்கள் இருக்கின்றன. உணவில் கை வைத்தாலே அதிகாரிகள் அவரை கண்காணிக்கிறார்கள். இது மிகவும் வெட்கக்கேடானது. அவர் சுகர் நோயாளி.. கடந்த 12 ஆண்டுகளாக இன்சுலின் எடுத்துக்கொள்கிறார். ஆனால் சிறையில் அவருக்கு இன்சுலின் மறுக்கப்படுகிறது. அவர்கள் டெல்லி முதலமைச்சரைக் கொல்ல பார்க்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவாலையும், (ஜார்கண்ட் முன்னாள் முதல்வர்) ஹேமந்த் சோரனையும் சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை. இருந்த போதிலும் அவர்களைச் சிறையில் அடைத்துள்ளனர். இதற்குப் பெயர் தான் சர்வாதிகாரம்.
என் கணவர் செய்த தவறு என்ன? நல்ல கல்வி, மருத்துவத்தை மக்களுக்கு வழங்கினார். அதுதான் அவர் செய்த தவறா? அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மக்களுக்காகத் தனது உயிரைப் பணயம் வைத்துள்ளார். அவர் ஐஐடியில் படித்தவர். அவர் நினைத்திருந்தால் மற்றவர்களைப் போல வெளிநாடு சென்றிருக்கலாம். ஆனால், அவருக்குத் தேசபக்தி அதிகம். இதனால் அவர் நாட்டிற்குச் சேவை செய்தார். ஐஆர்எஸ் அதிகாரியாக இருந்த அவர் லீவ் போட்டுவிட்டு மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டார். அவர் மக்களுக்காகத் தனது உயிரைப் பணயம் வைத்துள்ளார்.
சர்க்கரை நோயாளியான அவர், கடந்த 12 ஆண்டுகளாகத் தினமும் 50 யூனிட் இன்சுலின் எடுத்து வருகிறார். ஆனால் சிறையில் அவருக்கு இன்சுலின் வழங்கப்படுவதில்லை. டெல்லி முதல்வரைக் கொல்ல நினைக்கிறார்கள். அவரை மன ரீதியாக காலி செய்ய முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். உண்மையில் அவர்கள் கெஜ்ரிவாலை புரிந்துகொள்ளவில்லை. அவர் மிகவும் தைரியமான சிங்கம். சிறையில் கூட நாட்டைப் பற்றியே சிந்திக்கிறார். அவரை மன ரீதியாகச் சோர்வடைய வைக்க உங்களால் முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.