தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல்: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்!

பிரதமர் மோடியின் ராஜஸ்தான் பேச்சுக்கு எதிர்க்கட்சி கண்டனம் தெரிவித்து வருகின்றன. வெறுப்புப் பேச்சு என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்திலும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பேசியதை பகிர்ந்து, “தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல்” என்று பதிவிட்டுள்ளார். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பாஜகவின் தேர்தல் அத்துமீறல்களை தொடர்ந்து பதிவிட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதை உணர்ந்தும் விதமாக “தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல்” என்று பதிவிட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்துவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவரின் சொத்துகள் கணக்கிடப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் என்ன சொன்னார்.. “நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை” என்றார். அப்படியானால் யாருடைய சொத்துகளை பறித்து யாரிடம் கொடுப்பீர்கள்?! சொத்துகள் ஊடுருவல்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்பதே அதன் பொருள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், ஊடுருவல்காரர்களுக்கே போக வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? நம் பெண்கள் எவ்வளவு தங்கம் மற்றும் வெள்ளி வைத்திருக்கிறார்கள் என்பதை காங்கிரஸ் கணக்கிடும். தங்கம் ஒரு பெண்ணின் சுயமரியாதை. ஒரு பெண்ணின் தாலியின் மதிப்பு தங்கத்தின் விலையில் மட்டுமல்ல, அவர்களின் கனவுகளுடன் தொடர்புடையது. ஒரு பெண்ணின் தாலியை பறிப்பதற்கு எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது” என்று ஆவேசமாக கூறினார்.

பிரதமர் மோடியின் இந்த பேச்சு கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளது. இதை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், Rest in Peace….Election Commission of India என்று கூறியுள்ளார். அதாவது இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆன்மா சாந்தியடையட்டும். என்று அமைச்சர் பிடிஆர் கடுமையாக தாக்கி பேசி உள்ளார். திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் அண்ணாதுரை இதை பற்றி செய்துள்ள போஸ்டில், தோல்வி பயத்தில் மோடி அவர்கள் பிதற்ற ஆரம்பித்துவிட்டார். இஸ்லாமியர்களை கேவலம் ஓட்டுக்காக இப்படி பேசலாமா? நெஞ்சம் பதைபதைக்கிறது! என்று குறிப்பிட்டு உள்ளார்.