வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம்: சத்யபிரதா சாகு!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு குளறுபடி குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதி மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என ஒட்டுமொத்தமாக 40 தொகுதிகளுக்கு கடந்த 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு விவரங்கள் அன்றைய தினம் இரவு வெளியிடப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் 72.09 சதவீதம் வாக்குப்பதிவானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று முன்தினம் அதிகாலை 12.30 மணியளவில் தமிழகத்தின் இறுதி வாக்குப்பதிவு விவரத்தை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையம் 69.94 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அறிவித்தது. பொதுவாக, இறுதியாக வெளியிடப்படும் வாக்கு சதவீதம் என்பது ஒன்று முதல் மூன்று சதவீதம் வரை அதிகரிக்க தான் செய்யும். ஆனால் தமிழகத்தில் இந்த முறை 3 சதவீதம் வரை குறைந்தது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மூன்றாவது முறையாக தமிழ்நாட்டில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தல் வாக்குப்பதிவில் இவ்வளவு குளறுபடி நிகழ்ந்ததற்கான காரணம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வாக்குப்பதிவு சதவீதத்தில் ஏற்பட்ட வேறுபாடுக்கு செயலியே காரணம். செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதம் கணக்கிட்டதால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. செயலியில் அனைத்து வாக்குச் சாவடி அலுவலர்களும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இதனால் சிலர் மட்டுமே அப்டேட் செய்தனர். ஒரு சிலர் மட்டுமே அப்டேட் செய்தார்கள், இதன் காரணமாகவே வாக்குப்பதிவு சதவீத குளறுபடி ஏற்பட்டது. தேர்தல் அதிகாரி கையொப்பமிட்ட தகவல் வர தாமதமாகும் என்பதால் செயலி மூலம் கிடைத்த தகவல்களை ஊடகங்களுக்கு அப்டேட் செய்தோம். இவ்வாறு சத்ய பிரதா சாஹூ விளக்கமளித்தார்.