“மக்களின் சொத்துகளைப் பறித்து காங்கிரஸ் தனது ஸ்பெஷல் ஆட்களுக்கு விநியோகிக்க சதி செய்கிறது என்ற உண்மையை நான் வெளிப்படுத்தினேன். இதனால், ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணியும் பீதியடைந்தது.” என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
முன்னதாக, ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் விதமாக இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகாரும் அளித்துள்ளன. இந்தநிலையில், மீண்டும் அதே கருத்தை வலியுறுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளார். ராஜஸ்தானின் டோங்க் நகரில் நடந்த பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசியதாவது:-
நேற்று முன்தினம் ராஜஸ்தானில் நான் சில உண்மையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தினேன். காங்கிரஸ் உங்கள் சொத்தை எக்ஸ்ரே செய்யும் என அதன் தலைவர் கூறுகிறார். உங்களின் சொத்துகள் மற்றும் பெண்கள் அணியும் நகைகளை கணக்கெடுப்பதாகவும் அவர்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். உங்களுக்கு இரண்டு வீடுகள் இருந்தால்கூட, அவர்கள் எக்ஸ்ரே செய்து ஒரு வீட்டைப் பறிப்பார்கள்.
இப்படி, மக்களின் சொத்துகளைப் பறித்து காங்கிரஸ் தனது ஸ்பெஷல் ஆட்களுக்கு விநியோகிக்க சதி செய்கிறது என்ற உண்மையை நான் வெளிப்படுத்தினேன். இதனால், ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணியும் பீதியடைந்துள்ளது. அவர்களின் அரசியலை நான் அம்பலப்படுத்திய போது, அவர்கள் என்னை திட்டும் அளவுக்கு கோபமடைந்தார்கள். எதிர்க்கட்சியினர் ஏன் உண்மையை கண்டு பயப்படுகிறார்கள். காங்கிரஸ் ஏன் தனது கொள்கைகளை மறைக்க விரும்புகிறது?.
நீங்கள் மறைத்ததை நான் அம்பலப்படுத்தியதும், நீங்கள் பயத்தில் நடுங்குகிறீர்கள். மேலும் இதனை வெளிப்படுத்தியதும் காங்கிரஸுக்கு என் மீது அதிக வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், என்னை வசைபாடத் தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலில் முழுமையாக மூழ்கியுள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முன்னுரிமை அளிப்பேன் எனக் கூறியது உண்மை. அந்தக் கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். அதுமட்டுமல்ல, 2004ல் ஆட்சிக்கு வந்ததும் காங்கிரஸ் முதல் வேலையாக, எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி இடஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கும் திட்டத்தை மேற்கொண்டது. நாடு முழுவதும் இத்திட்டத்தை செயல்படுத்த காங்கிரஸ் விரும்பியது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் அது முடியவில்லை” என்று பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கு எதிரானது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், ஹனுமான் சாலிசாவை கேட்பதும், நம்பிக்கையைப் பின்பற்றுவதும் குற்றமாகிவிட்டது. காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் ஹனுமான் சாலிசாவைக் கேட்டதற்காக ஒரு ஏழை இரக்கமின்றித் தாக்கப்பட்டார்” என்று தெரிவித்தார்.