மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
காவிரி ஆற்றில் தண்ணீரை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே 50 ஆண்டுகளுக்கு மேல் பிரச்னை நீடித்து வருகிறது. காவிரியில் முழு தண்ணீரும் தங்களுக்கே சொந்தம் என்பது போல கர்நாடகா நடந்துகொள்கிறது. இதனால் தமிழ்நாட்டிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுப்படி சரிவர தண்ணீர் திறப்பதில்லை. அதே சமயம் பெங்களூருவின் குடிநீர் பிரச்னையை சரிசெய்ய மேகதாதுவில் 9,000 கோடி செலவில் 60 டிஎம்சி தண்ணீரை தேக்கும் வகையில் புதிய அணையை கட்ட கர்நாடக அரசு கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அனுப்பிய போதிலும் அதற்கு மத்திய அரசு அனுமதி தரவில்லை.
அதே சமயம் மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு உள்ளது. மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கு நன்மை என்று கர்நாடகா நப்பாசை காட்டினாலும், இதற்கு முன்பே தண்ணீர் திறந்துவிடாத கர்நாடகா, மேகதாது அணை கட்டினால் மட்டும் தண்ணீர் திறந்துவிடுமா என்ற கேள்வியை தமிழ்நாடு முன்வைக்கிறது. தமிழ்நாட்டின் அனுமதி இன்றி மேகதாதுவில் ஒரு செங்கல்லை கூட கர்நாடகாவால் வைக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 26, மே 7 என இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் பிரதான பரப்புரையாக மேகதாது அணை இடம்பெற்றுள்ளது. காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் மேகதாது அணை கட்டப்படும் என சித்தராமையா, டி.கே.சிவக்குமார் கூறி வருகிறார்கள். அதே சமயம் பாஜகவும் இதேபோன்ற பரப்புரையை முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில் கர்நாடகாவில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஊடகத்திடம் மேகதாது விவகாரம் பற்றி பேசிய அண்ணாமலை, “மேகதாது அணை விவகாரத்தில் தமிழக பாஜக தெளிவாக உள்ளது. இதுகுறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. காவிரி ஆறின் கீழ் மட்டத்தில் உள்ள மாநிலங்களின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையை கட்டக்கூடாது” என்று தெரிவித்தார்.
மேலும், “தற்போது கர்நாடகாவில் நிலவக்கூடிய தண்ணீர் பஞ்சத்துக்கு காங்கிரஸ் அரசின் மோசமான நிர்வாகத் தன்மையே காரணம். மேகதாது அணைக்கும் கர்நாடக தண்ணீர் பஞ்சத்துக்கும் தொடர்பு இல்லை. மேகதாது அணையை பொறுத்தவரை தமிழ்நாட்டின் அனுமதி இன்றி கட்ட முடியாது என்ற தெளிவான நிலைப்பாட்டை பிரதமர் மோடியும், மத்திய அரசும், தமிழக பாஜகவும் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் டி.கே.சிவக்குமாரும், காங்கிரஸும் அரசியல் செய்கிறார்கள்” என்று குற்றம்சாட்டினார்.