மீண்டும் வெற்றிக்கனியோடு வந்து முதல்வர் ஸ்டாலினை சந்திப்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், தமிழ்நாடு புதுச்சேரியில் கடந்த 19ஆம் தேதியே வாக்குப்பதிவு நிறைவடைந்தது. நாளை இரண்டாம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் உள்ள 89 லோக்சபா தொகுதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் நன்றி தெரிவித்தனர். மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்ததற்காக இன்று முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து நன்றி தெரிவித்தார். அவருடன் காங்கிரஸ் சார்பில் லோக்சபா தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களும் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தனர். அதேபோல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலினை சந்தித்துவிட்டு வெளியே வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இன்று முதல்வர் ஸ்டாலினை, காங்கிரஸ் வெற்றி வேட்பாளர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர். அடுத்ததாக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வென்ற பிறகு வெற்றிக்கனியோடு வந்து முதல்வரை சந்திப்போம்” என்றார்.
இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களுக்குச் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அதுகுறித்து செய்தியாளர்கள் செல்வப்பெருந்தகையிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை, “அதற்கு வாய்ப்பு இருக்கிறது, இல்லை என்று சொல்ல முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.