ஒரு தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களை காட்டிலும் நோட்டா அதிக வாக்குகளைப் பெற்றால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
நமது நாட்டில் இப்போது லோக்சபா தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடக்கிறது. பொதுவாக எந்தவொரு தேர்தல் என்றாலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயருடன் கீழே நோட்டாவும் இருக்கும். எந்தவொரு வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்றால் நோட்டாவுக்கு வாக்களிக்கலாம். இருப்பினும், நோட்டாவுக்கு 99.99% வாக்குகள் விழுந்து.. ஒரே ஒரு வாக்கு எதாவது வேட்பாளருக்கு விழுந்தாலும் அந்த வேட்பாளர் தான் வென்றவராக அறிவிக்கப்படுவார். இதுவே இப்போது இருக்கும் விதி.
இதற்கிடையே இது தொடர்பான சுப்ரீம் கோர்ட் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதாவது ஒரு குறிப்பிட்ட தொகுதியில் எந்தவொரு வேட்பாளர்களைக் காட்டிலும் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் அந்தத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. எழுத்தாளரும் பேச்சாளருமான ஷிவ் கேரா என்பவர் இந்த பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். நோட்டா அதிக வாக்குகளைப் பெற்றால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த அவர், நோட்டாவை விடக் குறைவான வாக்குகளைப் பெறும் வேட்பாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். மேலும் நோட்டாவை தேர்தலில் போட்டியிடும் ஒரு கற்பனை வேட்பாளரைப் போல விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் அதற்கான விதிகளை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் கேரா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், “குஜராத் மாநிலம் சூரத்தில் என்ன நடந்தது எனப் பார்த்து இருப்பீர்கள்.. காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. பிற வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். இதனால் தேர்தலும் இல்லாமலேயே பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வேறு வேட்பாளர்கள் களத்தில் இல்லாததால், பொதுமக்கள் அனைவரும் அந்த ஒரு வேட்பாளரையே தேர்வு செய்வார்கள் என்று கருதி பாஜக வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்படி நடக்கக்கூடாது. ஒரே ஒரு வேட்பாளர் இருந்தாலும், வாக்காளருக்கு விருப்பத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். நோட்டாவிற்கும் களத்தில் இருக்கும் வேட்பாளருக்கும் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும். நல்ல வேட்பாளர்களை நிறுத்த அரசியல் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதே நோட்டாவின் நோக்கமாகும்.. ஒரு தொகுதியில் உள்ள அனைத்து வேட்பாளர்களுக்கும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிகழ்வுகள் இன்னும் தொடர்கின்றன. அப்படி இருக்கும் போது ஒரு வாக்காளர் என்ன செய்வார்? நோட்டா என்பது வாக்காளரின் கைகளில் ஒரு சக்திவாய்ந்த ஆயுதம். ஆனால், அவை முறையாக மற்றும் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. நோட்டா குறித்துத் தேர்தல் ஆணையம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. இது அனைத்து வேட்பாளர்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கும் விருப்பத்தின் நோக்கத்தைத் தோற்கடித்துவிட்டது. நோட்டாவை ஒரு வேட்பாளர் போலக் கருத வேண்டும். ஆனால் இந்தியத் தேர்தல் ஆணையம் இதைச் செய்யத் தவறிவிட்டது. ஜனநாயக ஆட்சியில் நோட்டா இன்றியமையாதது. தேர்தலில் நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் முடிவை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.
வாதங்களைப் பொறுமையாகக் கேட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் “இது தேர்தல் நடைமுறை பற்றியது. இது குறித்துத் தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்” என்று கூறி தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.