கோவை கார் வெடிப்பு வழக்கில் கடைசியாக கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான தாஹா நசீர் மீது தேசிய புலனாய்வுக் குழு (என்ஐஏ) குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் உள்ள ஒரு கோயில் அருகே கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி கார் சிலிண்டர் வெடித்தது. இந்த சம்பவம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த ஜமீஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் முதலில் விசாரணை நடத்தி வந்த நிலையில், பிறகு இந்த வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமீஷா முபின் வீட்டில், என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க தொடங்கிய என்ஐஏ, இந்த சம்பவத்தில் தொடர்புடைய 14 பேரை கைது செய்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக இப்போது வரை பல நபர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே, கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியைச் சேர்ந்த தாஹா நசீரை கடந்த நவம்பர் மாதம் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இவர் தான் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 14-வது குற்றவாளியாகும். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அவரை, பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இவர் மீதான குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.