பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு!

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் இன்று திங்கள்கிழமை மேல்முறையீடு செய்துள்ளார்.

2021-ஆம் ஆண்டில் பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடா்பாக, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் அளித்த தீா்ப்பை, விழுப்புரம் முதன்மை அமா்வு நீதிமன்றம் கடந்த பிப்.12-ஆம் தேதி உறுதி செய்தது. தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கவும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கவும் கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி, மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரியும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். மேலும், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யலாம் எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரியும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும் ராஜேஷ் தாஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.